Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review In Tamil : ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் நடித்து இன்று வெளியாகியுள்ள லப்பர் பந்து படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
Tamizharasan Pachamuthu
Harish Kalyan , Attakathi Dinesh , Sanjana Krishnamoorthi , Swasika Vijay , Kali venkat , Bala Saravanan , Geetha Kailasam
Theatrical Release
லப்பர் பந்து
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லப்பர் பந்து. ஹ்ரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , காலி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். லப்பர் பந்து படத்தின் முழு திரை விமர்சனம் இதோ.
லப்பர் பந்து கதை
எப்படியாவது தனது ஊரில் இருக்கும் ஜாலி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் குழுவிற்காக ஆடவேண்டும் என்பதே நாயகன் அன்பின் ( ஹரிஷ் கல்யாண்)சின்ன வயது ஆசை. ஆனால் அவனது சாதியை காரணம் காட்டியே அவனை டீமில் சேர்த்துகொள்ள மறுத்துவிடுகிறார்கள். தனது சொந்த ஊர் டீமால் மறுக்கப்படும் அன்பு பல்வேறு கிரிக்கெட் குழுவில் கெஸ்ட் வீரனாக விளையாடுகிறான்.
அதேபோல் மற்றொரு ஊரில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து தினேஷ் (அட்டகத்தின் தினேஷ்) . விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து.
மறுபக்கம் கெத்து மகள் துர்காவும் அன்புவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது கெத்து அன்பு இடையில் சின்ன மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. கெத்துவின் மகள் துர்காவுக்கும் அனுபுக்கும் இடையில் காதல் வளர்கிறது. விளையாட்டில் இரு ஆண்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சனை. அதே விளையாட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் , சாதியை காரணம் காட்டி கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு அம்சங்களை வைத்து ஒரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
நடிப்பு
கதையின் இரு நாயகர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவருக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல் தினேஷின் மனைவியாக நடித்துள்ள ஸ்வாசிகா விஜய் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கதையில் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.
நண்பராக வரும் பால சரவணன் , ஜென்சன் திவாகர் , காலி வெங்கட் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற்ன.
கவனம் ஈர்க்கும் வசனங்கள்
லப்பர் பந்து திரைப்படத்தின் வசனங்கள் பல இடங்களில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. எந்த இடத்தில் காட்சியின் தன்மையை மீறாமல் வசனம் இருக்க வேண்டும். எந்த இடத்தில் தனது அரசியலை வெளிப்படையாக பேச வேண்டும் என்கிற இயக்குநர் மிக தெளிவான முடிவுகளை எடுத்திருக்கிறார்.
தினேஷின் மனைவியான ஸ்வசிகா மற்றும் அவரது மாமியார் (கீதா கைலாசம்) இடையில் இருக்கு காட்சிகளுக்காவே இப்படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். சாதி விட்டு தனது மகன் திருமனம் செய்துகொண்ட கோபத்தை வெளியில் காட்டும் கீதா கைலாசம் உள்ளுக்குள் தனது மருமகளின் அன்பிற்கு கட்டுபட்டவராகவே இருக்கிறார். அதை அவர் வெளிப்படுத்து காட்சி ஒரு ஜெம்
வேறொரு இடத்தில் காலி வெங்கட் சொல்லும் "கிரிக்கெட்னா பிடிக்கும் பிடிக்கிறதுக்கு எதுக்கு ரீஸன்" என்கிற வசனம் விளையாட்டின் மீது அவருக்கும் இருக்கும் காதலை மிக சுருக்கமாக சொல்லிவிடுகிறது. இதே மாதிரி விளையாட்டில் சாதி திமிர் இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள் ஆண் திமிருடன் இருப்பது சரியா? என்கிற வசனமும் கைதட்டல்களை பெறுகிறது.
விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால் இப்படியான படத்தை விறுவிறுப்பாக வைத்துக்கொள்ளும் சவால் இயக்குநருக்கு இருக்கிறது. அந்த விறுவிறுப்பை வெறும் விளையாட்டிற்காக மட்டுமாக நினைக்காமல் கதை நடக்கும் மற்ற பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தி இருப்பதே லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
சென்னை 28 படத்திற்கு பின் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான ஒரு நல்ல படம் லப்பர் பந்து என்று நிச்சயமாக சொல்லலாம்.