(Source: ECI/ABP News/ABP Majha)
Garudan Movie Review: சூரியின் மாஸ் ஆக்சன்.. பக்கா கமர்ஷியல் கதையில் ஹீரோவாக ஜெயித்தாரா.. கருடன் பட விமர்சனம்!
Garudan Movie Review in Tamil: ஹீரோவாக மீண்டும் களமிறங்கியுள்ள நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள கருடன் படத்தின் விமர்சனம் இதோ!
R S Durai SenthilKumar
Soori M. Sasi Kumar Unni Mukundan Sshivada Samuthirakani R V Udayakumar Mime Gopi Vadivukkarasi Revathi Sharma
Theatre
Garudan Movie Review in Tamil: காமெடியில் இருந்து தேர்ந்த நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, விடுதலை படத்துக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் பிரதான கதாநாயகனாக நடித்துள்ள கருடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கருடன் திரைப்பட விமர்சனம்
துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரேவதி ஷர்மா, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனமீர்த்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தின் மூலம் நடிகர் சூரி மீண்டும் ஹீரோவாக மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டாரா எனப் பார்க்கலாம்.
கதைக்கரு
தமிழ்நாட்டில் தென் பகுதியில் நட்பு, அன்பு, துரோகம், நியாயம், விசுவாசம் இவற்றை மையப்படுத்திய நகரும் கோலிவுட்டின் மற்றுமொரு கதை. சிறு வயது முதல் நட்பின் இலக்கணமாக வளரும் ஆதி (சசிக்குமார்) மற்றும் கர்ணா (உன்னி முகுந்தன்) ஆகிய இருவரின் வாழ்க்கையில் வந்து சேர்கிறார் ‘சொக்கன்’ எனப்படும் நடிகர் சூரி. ஊர், பேர் தெரியாமல் அடைக்கலம் இல்லாமல் வாழ்ந்த தனக்கு, உணவளித்து தத்தெடுத்துக் கொண்ட கர்ணாவின் வலது கரம் ஆவதுடன் நாயை விட நன்றியுடையவராக, எள் என்றால் எண்ணெயாக நிற்கும் நபராக மாறி, கர்ணா மற்றும் அவரது நண்பர் ஆதி என இருவரையும் காக்கிறார் சூரி.
தேனி மாவட்ட கிராமத்தில் லாரி பிஸ்னஸ், செங்கல் சூளை, கோயில் சொத்தை பராமரிப்பது எனக் குடும்பமாக, ஊரின் முக்கியப் புள்ளிகளாக வலம் வரும் இவர்களது வாழ்வில், சென்னையில் இருக்கும் கோயில் நிலம் ஒன்றின் பத்திரத்தால் இடையூறு வருகிறது. ஊருக்கு புதிதாக சென்று சேரும் போலீஸ் உயர் அதிகாரியான சமுத்திரக்கனி மூலம் அமைச்சரான இயக்குநர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த இவர்களது குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் தொடங்குகிறது. இவற்றுக்கு மத்தியில் ஆதி - கர்ணா - சொக்கன் இவர்களது உறவு என்ன ஆனது என்பதை சரியான கமர்ஷியல் அம்சங்களுடனும் தேர்ந்த கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்புடனும் சொல்லி இருக்கிறார்கள்.
சம்பவம் செய்த சூரி!
சொக்கனாக படத்தின் நாயகன் சூரி. நடிகர் உன்னி முகுந்தனின் மீது அதீத அன்பு கொண்ட அடிமையாகவும் இரண்டாவது முறையாக கதையின் நாயகனாகவும் மாஸ் காண்பித்து ஃபயர் எமோஜிக்களை பறக்கவிட வைக்கிறார். ஆதி - கர்ணா நட்பின் இலக்கணம் என்றாலும், கர்ணாவின் மீது ஆதியையே ரெண்டு அடி போட கை வைக்க விடாமல் தடுப்பது, மூளை வேண்டாம் என்றாலும் பாசத்துக்கு கட்டுப்பட்டு அமைதி காப்பது, அதே பாசத்தால் ஒரு கட்டத்தில் அடிமை மனநிலையில் இருந்து நாயக பிம்பமாக மாறுவது என சூரி முதல் பாதியில் அண்டர்பிளே செய்தும், இரண்டாம் பாதியில் திரை முழுக்க வியாபித்தும் சம்பவம் செய்துள்ளார். நாயகனாகவும் அதே நேரம் படத்தில் காமெடி வேண்டியபோது சிரிக்க வைத்தும் ரசிகர்களை கட்டிப்போடும் சூரி இப்படியே பயணிக்க வாழ்த்துகள்!
நிறை, குறை..
ஆதி கதாபாத்திரத்தில் தன் வழக்கமான, கதைக்கு தேவையான நடிப்பை சரியான மீட்டரில் சசிக்குமார் வெளிப்படுத்த, நண்பனையும், விசுவாசம் காட்டும் சூரியையும் உபயோகித்துக் கொள்ளும் கர்ணா கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் பொருந்திப் போகிறார். பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு, கையறு நிலையில் வலம் வந்து, சரியான நேரத்தில் பேசும் ப்ராகடிகலான போலீசாக சமுத்திரக்கனி கச்சிதம். ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி என கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை சக நடிகர்கள் வழங்க, நெடுஞ்சாலை ஷிவதா இரண்டாம் பாதியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதையுடன் ஒன்ற வைக்கிறார்.
பின்னணி இசை மற்றும் பஞ்சவர்ணக் கிளியே பாடல் வழியாக ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார் யுவன். தேனியின் வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப் பகுதியின் குளுமையையும், நட்பு, துரோகம் என உணர்வுக்கேற்றபடி திரை அனுபவத்தையும் பதிவு செய்துள்ளது ஆர்தர் வில்சனின் கேமரா. இடைவேளைக் காட்சி, சூரியின் கதாபாத்திர எழுச்சி, கைகூடி வந்த சரியான கமர்ஷியல் அம்சங்கள் என அயற்சியை ஏற்படுத்தாமல் திரைக்கதை சீராகப் பயணித்தாலும், ஊகிக்க முடிந்த காட்சிகள் படத்தின் பெரும் மைனஸ்.
சூரியைத் தவிர வேறு கதாபாத்திரங்களில் புதுமை, விறுவிறுப்பு இல்லை. சூதாட்டம், போதை தாண்டி கர்ணா கதாபாத்திர மாற்றத்துக்கு இன்னும் வலுவான காரணம் சேர்த்திருக்கலாம். “நாயைப் போல் இருந்தேன், என்னை மனுஷனா மாத்திட்டீங்க” என்பன போன்ற வசனங்கள் தாண்டி, தன் விஸ்வாசம் யாருக்கானது என சரியாக இனம்கண்டு நியாயம் சேர்த்திருக்கும் கதைக்கு பாராட்டுகள். ஆக மொத்தத்தில் விசுவாசமிக்க கருடனை தியேட்டரில் குடும்பத்துடன் சென்று தாராளமாக ரசிக்கலாம்.