(Source: ECI/ABP News/ABP Majha)
DSP Movie Review: அசால்ட்டு சேதுபதி... அதகளம் பண்ணும் டிஎஸ்பி... அலறி ஓடும் ரசிகர்கள்! - முழு திரை விமர்சனம் இங்கே...!
படம் ஆரம்பித்த 20 நிமிடங்களிலே ரசிகர்கள் டயர்டு ஆகி விட்டனர். சரி முதல் பாதிதான் இப்படி இருக்கிறது என்றால் இராண்டாம் பாதியிலாவது ஏதாவது எதிர்பார்க்கலாம் என்று பார்த்தால்...
Ponram.
Vijay Sethupathi, Anukereethy, D.Imman, Ponram.
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ டி.எஸ்.பி’. அனு கீர்த்தி, புகழ், பாகுபலி பிரபாகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
பூக்கடை வியாபாரியாக இருக்கும் சண்முகம் (ஞான சம்பந்தம்) தனது மகனான வாஸ்கோடாகாமாவை (விஜய்சேதுபதி) எப்படியாவது அரசு வேலையில் சேர்த்து விட துடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் பிற வேலைகளுக்கு எதுவும் செல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு ஜாலியாக இருக்கிறார் வாஸ்கோடாகாமா.
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் உயிர் நண்பனின் அப்பாவை முட்டை ரவி (பாகுபலி பிரபாகர்) பிரச்சினை ஒன்றில் கொன்று விட, வாஸ்கோடாகாமாவுக்கும், முட்டை ரவிக்கும் இடையே விரோதம் முளைக்கிறது. அதனைத்தொடர்ந்து மீண்டும் பிரச்சினை ஒன்றில் முட்டை ரவியை சந்திக்கும் வாஸ்கோடாகாமா, பொதுவெளியில் போட்டு பொளக்கிறார்.
ரெளடி என்றாலே முதலீடு பயம் என்றிருக்கும் நிலையில், அந்த பயத்தை உடைத்த வாஸ்கோடாகாமாவை கொன்றே தீருவேன் என்ற வெறியோடு சுற்றுகிறார் ரவி. இறுதியில் வாஸ்கோடாகாமா வில்லனை கொன்றாரா? இல்லை வில்லன் வாஸ்கோடாகாமாவை கொன்றாரா? இதற்கிடையில் விஜய்சேதுபதிக்கு வந்து சேரும் போலீஸ் உடை அவருக்கு எப்படி உதவியது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் கதை.
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து, அண்மைகாலமாக வெளிவந்த படங்கள் எதுவுமே சொல்லுமளவிற்கான வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில்தான், சேதுபதி படத்திற்கு பிறகு மீண்டும் இதில், போலீஸ் அவதாரம் எடுத்திருக்கும் அவர், அதை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை விஜய்சேதுபதி பூர்த்தி செய்திருக்கிறாரா என்றால் அதற்கான பதில் நிச்சயம் இல்லை என்பதுதான். வாஸ்கோடாகாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் அனு கீர்த்தி, அந்த கதாபாத்திரத்திற்கு சுத்தமாக பொருந்த வில்லை. விஜய்சேதுபதிக்கும் அவருக்கும் இடையேயான காதல் கொஞ்சம் கூட கனெக்ட் ஆக வில்லை. வில்லனாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பிற எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்க வில்லை.
சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களில் படுதோல்வியை சந்தித்த இயக்குநர் பொன்ராமுக்கு டிஎஸ்பி படத்திலும் அதுவே பரிசாக கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். பொன்ராமின் மிகப்பெரிய பலம் அவரின் காமெடி டச். சரி, ஒரே ஜானரில்தான் படம் எடுப்பேன் என முடிவாகிவிட்டது. அப்படியானால் அந்த டச், முந்தைய படங்களிலிருந்து எந்த அளவுக்கு மெருகேறி இருக்க வேண்டும். ஆனால் டிஎஸ்பியில் அது அப்படியே தலைகீழாக மாறி, அதளபாதளத்திற்கு சென்றிருக்கிறது.
படம் ஆரம்பித்த 20 நிமிடங்களிலேயே ரசிகர்கள் டயர்டு ஆகி விட்டனர். சரி முதல் பாதிதான் இப்படி இருக்கிறது என்றால், இராண்டாம் பாதியிலாவது ஏதாவது எதிர்பார்க்கலாம் என்று பார்த்தால், அது அதைவிட கொடுமையாக இருந்தது. விஜய் சேதுபதி ஆக்சனுக்கும் காமெடிக்கும் மாறி மாறி சென்று அவர் திணறுவது மட்டுமல்லாமல் நம்மையும் திணறவைக்கிறார். புகழின் சில காமெடிகள் சிரிக்க வைத்தாலும் அவரிடம் இருந்தும் நமக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. டி இமானின் இசை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆக மொத்ததில் விஜய் சேதுபதியின் ப்ளாப் லிஸ்ட் பட்டியலில் டிஎஸ்பியும் இணைந்து கொண்டது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.