Devara Review : டபுள் ரோலில் கலக்கினாரா ஜூனியர் என்.டி.ஆர்...தேவரா திரைப்பட விமர்சனம் இதோ
Devara Review Tamil: கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா முதல் பாகத்தில் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்
Korattala Siva
Jr NTR , Janhvi Kapoor , Prakash Raj , Saif Ali Khan , Kalaiyarasan , Shine Tom Chako
Theatrical Release
தேவரா விமர்சனம்
கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பிரகாஷ் ராஜ் , சைஃப் அலிகான் , ஜான்வி கபூர் , கலையரசன் , ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
தேவரா கதை
பிரபல தாதாக்கள் இருவர் நடக்கவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் குண்டு வைக்க இருப்பதாக மும்பை காவல் துறைக்கு தகவல் வருகிறது. இந்த தீவிரவாத கும்பலைத் தேடி ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ரத்தினகிரிக்கு ஒரு போலீஸ் தனிப்படை ஒன்று கடத்தல்கார கும்பல் போல நடித்து விசாரணை செய்கிறது. நடுக்கடலில் இருந்து சரக்கு கப்பலில் வரும் கடத்தல் பொருட்களை கைமாற்றுவதில் தேர்ந்தவனான பைராவிடம் ( சைஃப் அலிகான்) உதவி கேட்கிறது போலீஸ். ஆனால் பைரா உட்பட அனைவரும் கடலுக்குள் செல்ல பயப்படுகிறார்கள். இந்த பயத்திற்கு காரணம் தேவரா ( ஜூனியர் என்.டி.ஆர்). கதை பல வருடங்கள் பின்னுக்குச் செல்கிறது.
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்து விலை மதிப்பற்ற செல்வங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த செல்வங்களை எல்லாம் கப்பலில் இருந்து கடத்தி மறுபடியும் நாட்டிற்கே கொண்டு வருவதைதே லட்சியமாக கொண்டவர்கள் ரத்தினகிரி மலையில் வாழும் நான்கு கிராம மக்கள். சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பார் அற்றுபோன பிழைப்பிற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் தேவரா , பைரா மற்றும் அவனது நண்பர்கள்.
கடத்தப்பட்ட ஆயுதங்கள் தீவிரவாத செயலுக்கு பயண்படுவது தெரிந்து இனிமேல் கடலுக்கு யாரும் செல்லக்கூடாது என முடிவு செய்கிறார் தேவரா. இது பிடிக்காத பைரா உள்ளிட்ட அவனது சகாக்கள் தேவராவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதனால் தேவரா கடலுக்குள் சென்று பதுங்குகிறான். கடலுக்குள் கடத்தலுக்காக செல்லுபவர்கள் பினமாக திரும்பி வருகிறார்கள். ஒரு நாள் தேவரா திரும்பி வருவான் அப்போது அவனை கொலை செய்ய காத்திருக்கிறான் பைரா. தேவராவை வெளியே வரவழைக்க அவன் மகனான வராவை தனது கும்பலுடன் கடலுக்கு அனுப்புகிறான். தேவரா திரும்பி வந்தாரா. அவனை கொல்ல நினைக்கும் பைராவின் ஆசை நிறைவேறியதா என்பதே தேவரா முதல் பாகத்தின் கதை.
தேவரா விமர்சனம்
முதல் பாதி
தந்தை மகன் என ஜூனியர் இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முதல் பாகம் முழுவதும் அப்பாவையும் இரண்டாம் பாகம் மகனையும் மையமாக வைத்து நகர்கிறது. எத்தனை பேர் வந்தாலும் வீழ்த்தக் கூடிய மாவீரன் தேவரா. ஓப்பனிங் சீனில் சுறா பட விஜய் மாதிரி என்ட்ரி கொடுத்ததை தவிர மீதி காட்சிகள் சுவாரஸ்யமாகவே உள்ளன.
கப்பலில் கடத்தலில் ஈடுபடும் காட்சிகள் , ஆயுத பூஜையின் போது நடக்கும் போட்டி ஒரே ஆளாக ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைபோடும் காட்சிகள் என நிதானமாக முதல் பாகம் சொல்லப்பட்டிருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை , இண்டர்வல் ப்ளாக்கில் வரும் தேவரா பாடல் ரசிகர்களுக்கு விசில் போடும் தருணங்களாக அமைகின்றன.
இரண்டாம் பாதி
இரண்டாம் பாகம் முழுவதும் தேவராவின் மகன் வரா வை மையப்படுத்தி நகர்கிறது. அப்பாவின் குணத்திற்கு நேர்மாறாக பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கிறார் வரா. நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளுக்கு வந்து ஒரு பாட்டிற்கு நடனமாடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். முதல் பாகத்தில் அப்பா ஜூனியர் என்.டி. ஆர் காட்சிகளில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாகத்தில் இல்லாமலே போய்விடுகிறது. கட்டாயத்திற்கு வைக்கப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளே நிறைய இடத்தை நிரப்பிவிடுகின்றன. இந்த காட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் மகன் ஜூனியர் என். டி. ஆரின் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
முதல் பாதியில் ஆக்டிவாக இருந்த சைஃப் அலிகானின் கதாபாத்திரமும் பலமிழந்து போகிறது. இறுதி க்ளைமேக்ஸில் வரும் ட்விஸ்ட் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கலாம். இந்த கதை முழுவதும் பிரகாஷ் ராஜின் பார்வையில் சொல்லப்பட்டாலும் அவருக்கு படத்தில் எந்த ரோலும் இல்லை என்பது தான் காமெடி.
தீவிரவாத கும்பலை தேடிவந்த போலீஸ் வந்த வேலையை விட்டு தேவரா கதையை கேட்க உட்கார்ந்துவிடுவதை நினைத்து பரிதாப்படுவதா சிரிப்பதா என தெரியவில்லை. சுறாவின் மேல் சவாரி , ஒரே ஆளாய் ஒரு டன் வெயிட்டை தள்ளுவது போன்ற காட்சிகள் தெலுங்கு பட விரும்பிகளுக்கு கைதட்டும் மொமண்ட்ஸ். இறுதியாக இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்க பாகுபலி ஸ்டைலில் ஒரு ட்விஸ்டுடன் முடிகிறது தேவரா.
ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் அனிருத்தின் பின்னணி இசையுமே தேவரா படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம் . எதார்த்தத்தை மீறிய மிகையான காட்சிகளை ஒரு அனிமே பார்ப்பது போல் சாகசமாக மாற்றுகிறார் ரத்தினவேலு. இன்னொரு பக்கம் அனிருத்தின் பின்னணி இசை இந்த காட்சிகளை ரசிக்கவைக்கின்றன.
கே.ஜி.எஃப் ஸ்டைலில் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு தேவரா படம் ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.
ALSO READ | Meiyazhagan Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..