Bommai Nayagi Review: பெண் குழந்தைகளின் பாதுகாப்பு யார் கையில்? சிந்திக்க வைத்தாரா பொம்மை நாயகி?
Bommai Nayagi Review in Tamil: நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை நாயகி’ திரைப்படம் நாளை (பிப்.3) திரையரங்குகளில் வெளியாகிறது.
Shan
Yogi Babu, Srimathi, Harikrishnan Anbudurai, G M Kumar, Subatra
ஷான் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை, ஜி.எம்.குமார், சுபத்ரா, ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ’பொம்மை நாயகி’. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் நாளை (பிப்.03) வெளியாகிறது.
கதை
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிக்குப்பம் என்கிற ஊரில் தன் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார் வேலு (யோகி பாபு.) அதே பகுதியில் அவருடைய அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஆனால், வேலு தன் தந்தையின் இரண்டாம் தாரத்திற்கு பிறந்த மகன் என்பதால் அண்ணனான அருள்தாஸ் ஒரு விலகலுடனே பழகி வருகிறார். அதற்கு முக்கியக் காரணம் வேலுவின் அம்மா தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மேலும், அருள்தாஸ் அரசியலிலும் செல்வாக்குடன் இருக்கிறார்.
இந்த நிலையில், திடீரென கோயில் திருவிழாவின்போது தன் மகளான பொம்மை நாயகியைக் காணவில்லை என வேலு வீட்டிற்கு தேடிச் செல்கிறார். அங்கு இருவர் அந்தக் குழந்தையிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்கின்றனர்.
இதனைக் கண்ட வேலு அவர்களைக் அடித்துத் துரத்துவதுடன் தன் அண்ணனான அருள்தாஸிடம் பிரச்னையை கொண்டு செல்கிறார். இந்தக் குற்றத்தை செய்தவர்கள் அருள்தாஸ் சாதியைச் சேர்ந்தவர்கள். இதை அருள்தாஸ் எப்படி எதிர்கொள்கிறார்? தன் மகளுக்கான நீதியை ஒரு தந்தையாக வேலு எப்படி பெற்றுத் தருகிறார்? என்கிற மீதிக் கதை எதார்த்தமான திரைக்கதையுடன் நகர்கிறது.
பாத்திரத் தேர்வு
பா. இரஞ்சித் தயாரிப்பில் எப்போதும் இடம்பெறுவதுபோல் வசனங்கள் பெரிதாக இடம் பெறாமல் இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாகக் கொண்டு இயக்குநர் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
படத்தில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவராக வரும் ஜீவா (ஹரி கிருஷ்ணன்) சில இடங்களில் கதைக்கு சரியான தேர்வாக நடித்துள்ளார்.
யோகி பாபுவின் அப்பாவாக நடித்த ஜி.எம். குமார், மனைவியாக நடித்த சுபத்ரா, பொம்மை நாயகியான ஸ்ரீமதி ஆகியோர் மனதிற்கு நெருக்கமான முகங்களாக இருக்கிறார்கள்.
நகைச்சுவைக்காக சில காட்சிகள் வலிந்து உருவாக்கப்பட்டுள்ளன. பெரிதாக அவை கைகொடுக்கவில்லை. அதேநேரம், தன் மகளின் நிலையைக் கண்டு துக்கத்துடன் அலையும் தந்தையாக யோகி பாபு நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார்.
பாலியல் அத்து மீறல்
அண்ணன் தம்பியாக இருந்தாலும் சாதியும் அதிகாரமும் ஒருவரை எப்படி மாற்றுகின்றன என்பதை கருவாகக்கொண்டு கதை உருவாக்கப்பட்டாலும், சமீப காலமாக தொடர்ந்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான திரைப்படங்களும் காட்சிகளும் அதிகரித்து வரும் சூழலில் இப்படம் பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
முக்கியமாக நீதிமன்றக் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கூடுதல் கவனத்தையும் வசனங்களையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெரிய பதற்றத்தைக் கொடுக்கும் வேளையில் பாரத மாதா யார்? என்கிற கேள்விக்கு பொம்மை நாயகி சொல்லும் பதில் கைதட்ட வைப்பதுடன் யோசிக்கவும் வைக்கிறது.