Agilan Movie Review: ஆழியின் அரசனாக ‘அகிலன்’..கடல் அவருக்கு கை கொடுத்ததா? கவிழ்த்துவிட்டதா? விமர்சனம் இதோ!
Agilan Movie Review in Tamil: ஜெயம் ரவி-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள அகிலன் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
N. Kalyanakrishnan
Jayam Ravi, Priya, Tanya, N Kalyana Krishnan, Sam C S, Tanya Ravichandran
ஜெயம் ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கியவர், என். கல்யாண கிருஷ்ணன். ஜெயம் ரவியை முதன்முறையாக வட சென்னை ஆளாக தனது படத்தில் காட்டியிருப்பார். அதே இயக்குநருடன் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் கை கோர்த்துள்ளார், ஜெயம் ரவி. இப்படத்தில் கரடுமுரடான துறைமுக தொழிலாளியாக வந்து, கடல் வழியில் நடக்கும் மாஃபியாவில் முக்கிய பங்காற்றுகிறார். சரி, அகிலன் படம் எப்படிதான் இருக்கிறது? வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.
கதையின் கரு:
இந்தியாவின் கடல் வழி கள்ளக்கடத்தலுக்கு தலைவனாக விளங்குகிறார், கபூர். அவன் ஆணையிடும் பொருட்களை தனது ஆட்களை வைத்து கடல் வழியாக கடத்தும் பெரிய தாதா ஹரிஷ் பேரடி. இவரிடம் திறமையான கடத்தல்காரன் எனப் பெயரெடுப்பவர்தான் நம்ம ஹீரோ அகிலன்(ஜெயம் ரவி). இவருக்கு உதவும் காவல் அதிகாரியாகவும் காதலியாகவும் வருகிறார், பிரியா பவானி சங்கர். அகிலனை பிடித்து ஜெயிலில் தள்ளியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் டெல்லி இன்டலிஜன்ஸ் படையை சேர்ந்த போலீஸாக வருகிறார் கோகுல்(சிரக் ஜானி) அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு முடிக்கவேண்டிய வேலைகளை கனகச்சிதமாக முடிக்கிறார், ஜெயம்ரவி.
இவரது வேலைகளால் இம்ப்ரஸ் ஆகும் கள்ளக்கடத்தல் தலைவன் கபூர், ஒரு வெளிநாட்டு தீவிரவாதியை கடல் வழியே வெளிநாட்டிற்கு தப்பிக்க வைக்க வேண்டும் என சேலஞ்ஜ் வைக்கிறார். அதை ஜெயம் ரவி செய்து முடித்தாரா? ஜெயம் ரவி உண்மையாகவே கள்ளக்கடத்தலில்தான் ஈடுபடுகிறாரா? அல்லது வேறு இவர் ஒரு உளவுத்துறை ஏஜெண்ட்டா? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதிக்கதை.
கண் இமைக்க வைக்காத திரைக்கதை:
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, கடல் வழி கடத்தல்களில் ஈடுபடும் ‘ரக்கட்’ நாயகனாக படத்தின் ஆரம்பத்திலேயே பதிந்து விடுகிறார், ஜெயம்ரவி. படம் தொடங்கிய ஓரிரு இடங்களிலேயே வேகமெடுக்கும் திரைக்கதைக்கு ஆங்காங்கே ‘ஸ்பீட் ப்ரேக்கர்’ போல சில தொய்வுகள் ஏற்பட்டாலும் அடுத்தடு எடுத்த வேகத்தில் நிற்காமல் பயணம் செய்கிறது திரைக்கதை. கடலில் நடைபெறும் கள்ளக்கடத்தலை காண்பித்த விதத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.
படம் பார்ப்பவர்கள் ஒரு இடத்தில் கூட, அங்கு இங்கு கண்ணை அசைக்கவோ, கொட்டாவியோ விடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவிற்கு படத்தை போர் அடிக்காமல் சொல்லியிருக்கிறார், இயக்குநர், கல்யாண கிருஷ்ணன். கதைக்கு ஏற்றவாறு, சாம் சி.எஸ்சின் இசையும் ஈடு கொடுத்து பயணித்துள்ளது. படத்தில், ஒரு இடத்தில் கூட காமெடி இல்லை, ஆனாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை. பக்கா ஆக்ஷன்-கமர்ஷியல் படத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவையனைத்தும் இப்படத்தில் இருக்கிறது.
மிரட்டலான சண்டை காட்சிகள்:
அகிலன் படம், தரையில் எடுக்கப்பட்டதை விட தண்ணீரில்தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது. கடலின் அழகை மட்டுமே ரசிக்கும் மக்களிடம் அதன் இருட்டான மறு பக்கத்தையும் சொல்ல முயற்சித்து ஜெயித்திருக்கின்றனர். சமுத்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகளும், துரைமுகத்தில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் உள்ள மர்மங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
வீணாக பறந்து பறந்து சண்டை போடுவதை விட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் அசால்ட்டாக அடித்து துவம்சம் செய்கிறார்.
எல்லா படத்திலும் வருவதுபோல, “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா…இந்த ஹீரோ” என்ற கான்செப்ட், இப்படத்திலும் தொடருகிறது. முதல் பாதியில் யாரிடமும் அடிபணியாமல், அடி வாங்காமல் மாஸாக சுற்றும் ஹீரோ இரண்டாம் பாதியில் சற்று சறுக்கல்களை சந்திப்பது நம்பும் வகையில் இல்லை. எளிதாக சில திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும், அவையனைத்தும் கதைக்கு பொருந்தி போவதால் நமது மனம் அதை ஏற்றுக்கொள்கின்றது.
மிரட்டிய போலீஸ்..தெறிக்க விட்ட ஹீரோ
கழுத்தில் நங்கூர செயின் மாட்டிக்கொண்டு, “நான் இப்டிதான்..துரோகம் செய்வேன்..வன்மத்தை வைத்து கொள்வேன்..எனக்கு மேல யாராவது இருந்தா கால வாருவேன்..” என டைலாக் பேசி கைத்தட்டல் வாங்குகிறார், ஹீரோ ஜெயம் ரவி. படத்தில் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் வந்தாலும், படம் என்னவோ ஜெயம் ரவியை சுற்று மட்டுமே சுழல்வது சிறிது தொய்வளிக்கிறது. சின்ன ரோலில் வந்தாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனதில் நிற்கிறார், தான்யா ரவிச்சந்திரன். ஹீரோவிற்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை நாயகனுக்கு வில்லனாக வரும் காவல் அதிகாரி சிரக் ஜனிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நேர்மையான போலீஸாக இவர் வரும் காட்சிகள் அனைத்திலும் தியேட்டர் அதிர்கிறது. சிரக்கிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை அகிலன் படம் நிரூபித்துள்ளது. ‘குக் வித் கோமாளி’ புகழ் மைம் கோபியும், காளையனையும் படத்தில் பார்த்தது இன்ப அதிர்ச்சி.
பிரியா பவானி சங்கருக்கு ரெமான்ஸ் காட்சியும் இல்லை, படத்தில் பெரிதாக வேலையும் இல்லை. பெயருக்கு படத்தின் நாயகியாக வந்து போகிறார்.
நல்ல கமர்ஷியல் திரைப்படம்:
தமிழ் சினிமாவில் புதுவிதமாக கதையை தயாரிக்கிறேன், குடும்ப கதையை எடுக்கிறேன் என்ற பெயரில் சமீப காலமாக பலரும் ஏதேதோ செய்து வருகின்றனர். அதற்கு, சில பெரிய ஹீரோக்களும் பலிகடா ஆகின்றனர். ஆனால், அப்படி எந்த புதுவித முயற்சியையும் புகுத்தாமல், ரசிகர்களுக்கு நல்ல படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அகிலன் படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். வழக்கமான கோலிவுட் படங்களை போலவே இதிலும், 4ற்கும் மேற்பட்ட சண்டை காட்சிகளும், ஆங்காங்கே பாடல்களும், அவ்வப்போது பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இருப்பினும் மற்ற படங்களிடமிருந்து அகிலன் வேறுபடுவது, அதன் திரைக்கதையினால் மட்டுமே. நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நார்மலான கமர்ஷியல் படத்தை பார்த்த உணர்வினை தருகிறது, அகிலன் திரைப்படம்.
மொத்தத்தில், ஆற அமர உட்கார்ந்து நல்ல கதையுடன் கூடிய ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அகிலன் படத்தை தாராளமாக பார்க்கலாம்.