(Source: ECI/ABP News/ABP Majha)
Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!
Liger Movie Review in Tamil: படத்தின் ப்ளாட்டே அவ்வளவு வீக்காக இருந்தது. சரி, திரைக்கதை நன்றாக இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு படத்தை பார்க்க முயற்சித்தால்....
Puri Jagannadh
Vijay Deverakonda, Mike Tyson, Ananya Panday
Liger Movie Review in Tamil: விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரபல இயக்குநர் பூரிஜெகன்நாத் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘லைகர்’.
கதையின் கரு
மிக்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏ அரையிறுதி போட்டியில் விஜய்தேவரகொண்டா வின் அப்பா இறந்துவிடுகிறார். அதனை மனதில் கொண்டிருக்கும் லைகரின் அம்மா அவரை பெரிய சாம்பியனாக மாற்றியே தீர வேண்டும் என்று உறுதி எடுக்க, விஜயும் அதற்கு ஒத்துழைக்கிறார். இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும் விஜயின் வாழ்கையில் காதலியாக நுழைகிறார் அனன்யா பாண்டே. அந்தக்காதலால் இலக்கில் இருந்து தடம்மாறும் விஜய் இறுதியாக தனது அம்மாவின் கனவை நிறைவேற்றினாரா, அவரின் காதல் கைகூடியதா என்பதை அதிரடி சண்டைக்காட்சிகளுடன் சொல்வதே லைகர்.
கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் ‘லைகர்’ தொடர்பான பிரோமோஷன்தான் பேசுபொருளாக இருந்தது. காரணம் விஜய்தேவரகொண்டா. எங்கு பார்த்தாலும் அவரது ரசிகர்கள் அவர் மீது அன்பை கொட்டித்தீர்த்தார்கள். அர்ஜூன் ரெட்டியில் அசுரத்தனமான நடிப்பை கொடுத்து, ஸ்டாராக மாறிய விஜய்க்கு அடுத்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும் அவரது ரசிகர்கள் ஒரே மாதிரியான அன்பையே வெளிப்படுத்தினர். ஆனால் அந்த அன்புக்கு மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளித்து இருக்கிறார் விஜய். உடம்பை முறுக்கேற்றி ஃபிட்டாக வந்து நின்றால் போதுமா, அதை காலக்கட்டத்திற்கு ஏற்றவாரு தாங்கி நிற்க கதை வேண்டாமா.. அந்தக் கதைத்தேர்வில் மீண்டும் கோட்டை விட்டு இருக்கிறார் விஜய்.
சண்டைக்காட்சிகளில் மட்டுமே விஜயை ரசிக்க முடிகிறது. கிளாமருக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட காதலி அனன்யா பாண்டே, நடிப்பில் ஓவர் ரியாக்ஷன் கொடுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார். ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை பார்க்கும் போது ராஜ மாதாவுக்கா இந்த நிலைமை என்றே தோன்றியது. மைக் டைசன் உட்பட எந்தக்கதாபாத்திரமும் படத்திலும் தங்கவில்லை, மனசிலும் தங்கவில்லை.
பூரிஜெகன்நாத் இப்படி ஒரு கதையை எடுத்திருப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. படத்தின் ஆரம்பத்தில் அவர் பெயர் வரும் போது ‘எனக்கு கதை சொல்ல வராது.. ஏதோ ட்ரை பண்றேன் என்பார். படம் முடித்து வெளியே வரும் அவர் இந்தக்கதையை சொல்லாமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே வந்தது.
படத்தின் ப்ளாட்டே அவ்வளவு வீக்காக இருந்தது. சரி, திரைக்கதை நன்றாக இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு படத்தை பார்க்க முயற்சித்தால், பார்த்து பழகிபோன காட்சிகளை சுவாரசியம் இல்லாமல் கொடுத்து சோதித்து விட்டார். வசனங்களை கேட்கும் போது... 'டேய் சும்மா இருடா..' என்ற வார்த்தையையே திரையரங்கம் முழுக்க கேட்க முடிந்தது. பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசனின் கதாபாத்திரத்தை இவ்வளவு அலட்சியமாக கையாள்வது பூரி...? சண்டைக்காட்சிகளில் மெனக்கெடல்கள் தெரிந்தாலும், அதற்காக உருவாக்கப்பட்ட காரணங்கள் நம்மை நெழியவைத்து விடுகின்றன
பாடல்கள் ஏதோ ரசிக்கும் படியாக இருந்தாலும்,பின்னணி இசை.. இதுதான் பிஜிமா என்றே கேட்க வைக்கிறது.. ஒளிப்பதிவும் ஓகே ரகம்தான். இவ்வளவையும் மீறி நீங்கள் இந்தப்படத்தை பார்க்க சென்றால்.. 200 ரூபாய் உங்களுக்கு வெறும் தெண்டம்தான்.. தைரியம் இருக்குறவன் தியேட்டருக்கு வா..