King Of Kotha Review: மீண்டும் ஒரு ராஜூ பாய்...! சவுண்டு மட்டுமா? சரக்கு இருக்கா? - கிங் ஆஃப் கொத்தா முழு விமர்சனம்
King Of Kotha Movie Review in Tamil: துல்கர் சல்மான் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Abhilash Joshiy
DULQUER SALMAN, AISHWARYA LEKSHMI, SHABEER KALLARAKKAL, ANIKHA SURENDRAN
King Of Kotha Movie Review in Tamil: துல்கர் சல்மான் நடிப்பில் ‘கிங் ஆஃப் கொத்தா’ (King of kotha) படம் வெளியாகியிருக்கிறது. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், ஐஸ்வர்யா லட்சுமி, அனிகா சுரேந்தர்,ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேஃபாரர் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கிங் ஆஃப் கொத்தா படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
கொத்தாவின் கதை
ஆங்கிலேயர்களின் காலத்தில் குற்றவாளிகளை கொடூரமாக சுட்டுத்தள்ளி தண்டனை வழங்கும் இடம் தான் கொத்தா. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அங்கு குடிபெயர்கிறார்கள்.குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாக மாறுகிறது. அந்த இடம் போதைப் பொருள் வியாபாரம் செய்யும் கண்ணன் பாய் (ஷபீர்) என்கிற ரவுடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொத்தாவிற்கு புதிய காவல் அதிகாரியாக பதவியேற்க வருகிறார் இஸ்மாயில் (பிரசன்னா).
கண்ணன் பாய் செய்யும் அராஜகங்ஜளை எல்லாம் தெரிந்துகொள்ளும் பிரசன்னா அவன் பயப்படும் ஒரே ஆளான ராஜுவைப் (துல்கர் சல்மான்) பற்றித் தெரிந்து கொள்கிறார். ராஜுவின் பிளாஷ்பேக் தொடங்குகிறது. பல வருட காலமாக சினிமாக்களின் டெம்பிளெட் ஹீரோயிசம் செய்யும் கதாநாயகனாக அறிமுகமாகிறார் துல்கர். எல்லா ரவுடித்தனங்களை செய்யும் ராஜு தனது காதலிக்காக போதைப்பொருள் விற்பதை நிறுத்துகிறான். ஆனால் தனது காதலி மற்றும் நண்பன் ஆகிய இருவராலும் ஒரே நேரத்தில் ஏமாற்றப்பட்ட அவன் ஊரை விட்டு செல்கிறான். இப்போது மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் கண்ணன் பாயை அழிக்க திட்டமிட்டு மீண்டும் ராஜு பாயை கொத்தாவிற்கு வரவைக்கிறார் இஸ்மாயில். அவர் மீண்டும் வந்து கொத்தாவின் அரசனாகிறானா இல்லையா என்பதே மீதிக் கதை.
ஏதோ கத சொல்றாங்கனு போனா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வழக்கமான ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் துல்கர் சல்மான் நடித்தபோது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஒரு நடிகர் வழக்கமான ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா என்கிற கேள்வி இருந்தது.
ஆனால் வழக்கமான ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் இருக்கும் பெண் வெறுப்பும், நாயக வழிபாடும் இல்லாமல் இருந்ததே அந்தப் படத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்கு காரணம். அதே போல் இந்த முறையும் வழக்கமான ஒரு கேங்ஸ்டர் கதையில் ஏதாவது புதுமையான ஒன்றை துல்கர் செய்திருப்பார் என்கிற எதிர்பார்ப்பை உடைத்திருக்கிறது கிங் ஆஃப் கொத்தா. அதே கமர்ஷியல் சினிமாவின் (தொடக்கத்தில் வரும் மசாலா பாடலில் கூட மாற்றமில்லை) வழக்கமான அடாவடித்தனம் செய்யும், சிறந்த எத்தனை பேர் வந்தாலும் அசராமல் அடிக்கக் கூடிய ஒரு ஹீரோவாக மட்டுமே துல்கரின் கதாபாத்திரம் இருக்கிறது.
நல்லாதான போய்கிட்டு இருக்கு
ஆரம்பத்தில் விறுவிறுப்பான ஒரு கதையை பார்க்கப்போகிறோம் என்கிற ஆர்வம் மெல்ல குறைந்து படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வெறும் நாயக வழிபாடு மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஸ்லோமோஷன், ஒரு பி.ஜி.எம். ஒரு காட்சி முடிந்து வீட்டிற்கு துல்கர் போய் சட்டையை மாற்றிவிட்டு வருவதற்கு கூட பி.ஜி.எம் போட்டு பில்டப் கொடுத்திருக்கிறார்கள். சரி அதற்கு ஏற்ற மாதிரி சண்டைக் காட்சிகளையாவது பார்த்து ரசிக்கலாம் என்றால் இந்த ஆண்டின் மிக மோசமான ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த படம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்லோ மோஷனில் ஒப்பேத்தியிருக்கிறார்கள்.
பாட்ஷா, தளபதி, அஞ்சான் படங்களைப் போல் அதே இரு நண்பர்களுக்கு இடையிலான மோதலை மட்டுமே மையமாக வைத்து நகரும் படத்தின் இரண்டாவது பாதியில் எல்லா கதாபாத்திரங்களும் ஓரங்கட்டப் பட்டு மாஸ் காட்டுகிறேன் படத்தை நகர்த்த கதை என்று ஒன்று தேவை என்பதையும் மறந்துவிட்டார்கள் போலும். முடித்து விட்டு கிளம்பலாம் என்றால் படம் சீக்கிரம் முடிந்துவிடக்கூடாது என்பதற்காக சைடு வில்லன்களை எல்லாம் தனித்தனியாக கொலை செய்கிறார் நாயகன்.
நடிப்பு மட்டும் போதுமா
படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். போலீஸாக வரும் நடிகர் பிரசன்னாவின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கம்பீரமாக காட்டியிருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் மாஸாக கெத்தாக சில நேரங்களில் ஆணவத்தில் நம்மை எரிச்சல்படுத்தும் துல்கர் சல்மானை பார்க்கும்போது பேசாமல் சாக்லெட் பாயாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இப்போ என்ன சொல்ல வரேன்னா
சரி ஏதோ நடந்தது நடந்துவிட்டது அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் துல்கர் என்று அட்வைஸ் சொல்லிவிட்டு வரலாம் என்றால் இரண்டாம் பாகத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்று கையில் இன்விடேஷன் கொடுத்து அனுப்பிவிட்டார்.