Gargi Movie Review: அசரவைக்கும் சாய் பல்லவி பெர்ஃபாமன்ஸ்.. மிரட்டும் திரைக்கதை.. எப்படி இருக்கிறது கார்கி? இதோ உங்களுக்காக..
Gargi Movie Review in Tamil: பிரபல நடிகை சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் இன்று (ஜூலை 15) திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கார்கி. அதன் திரை விமர்சனம் இதோ..
Gautham Ramachandran
Sai Pallavi, Kaali Venkat, Aishwarya Lekshmi, R.S.Shivaji, Kalaimaamani Saravanan, Jayaprakash, Prathap, Sudha, Livingston, Kavithalaya Krishnan, Kalesh Ramanand
Gargi Movie Review in Tamil: பிரபல நடிகை சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் இன்று (ஜூலை 15) திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கார்கி(Gargi). அதன் திரை விமர்சனம் இதோ..
அன்றாட வாழ்வுக்கான செலவுகளை எண்ணி, பார்த்துப்பார்த்து செலவழிக்கும் லோயர் மிடில் கிளாஸ் குடும்பம். டீச்சர் வேலைக்கு சென்று குடும்பத்தை தோளில் சுமக்கும் கார்கியின் (சாய் பல்லவி) அப்பா பிரம்மானந்தம் (ஆர் எஸ் சிவாஜி) அப்பார்ட்மெண்ட் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
திடீரென்று ஒரு நாள் அந்த அப்பார்ட்மெண்டில், 9 வயது சிறுமி சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட, அதில் பிரம்மானந்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி காவல்துறை அவரையும் கைது செய்கிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சாய்பல்லவி, அப்பாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடுக்கும் முயற்சிகளும், பிரம்மானந்தாவிற்கும், அந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருந்ததா, உண்மையில் அங்கு நடந்தது என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்குமான விடையே கார்கி.
சாய் பல்லவியின் கரியரில் மற்றொரு மைல்கல் இந்த கார்கி. டீச்சராக, அக்காவாக, மகளாக, காதலியாக என பெர்ஃபாமன்ஸில் ஸ்கோர் அடிக்க அவ்வளவு ஸ்பேஸ். அதை கனகச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் பல்லவி. கண்ணாடி வளையல், பருத்திச் சேலை, நெற்றியில் திருநீர்க்கீற்று, ஹேண்ட் பேக் என வலம் வரும் கார்கி, அன்றாடம் நீங்கள் பார்க்கும் அதே பாந்தமான முகங்களை உங்களுக்கு நினைவுறுத்தும்.
ஊரே புறக்கணித்தாலும் தனது குடும்பத்திற்காக தூணாக, நின்றே தீருவேன் என்ற பிடிவாதம், வாட்டி வதைக்கும் இக்கட்டான சூழ்நிலையில் கூட நிலைகுலையாத தன்னம்பிக்கை, ஒதுங்கி நிற்கும் காதலனை புறந்தள்ளும் அறத்திமிர், உண்மையின் பக்கம் நிற்கும் நேர்மை என எல்லா இடங்களிலும் சாய்பல்லவி சிக்ஸருக்கு மேல் சிக்ஸர் அடிக்கிறார். அடுத்த பலம் காளி வெங்கட். நேர்மையான வழக்கறிஞராக, திக்கி திக்கி பேசும் அவரின் நடிப்பு அல்டிமேட்.. மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்கை செவ்வென செய்திருக்கின்றன.
இயக்குநர் கெளதம் ராமச்சந்திரனின் கதாபாத்திர தேர்வுக்கு முதல் பாராட்டுகள்.. ஆர்.எஸ். சிவாஜி தொடங்கி பருத்தி வீரன் சரவணன், லிவிங்ஸ்டன் என எல்லா கதாப்பாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. குறிப்பாக அந்த திருநங்கை ஜட்ஸ் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் தூள் ரகம்.
இவ்வளவு சிக்கலான கதையை, எந்த ஒரு முகச்சுளிவும் இல்லாமல், அதே வேளையில் கதைக்கான அதே இறுக்கத்தையும் தனது நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளனுக்கு கடத்தியதற்கு தனி பாராட்டுகள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நேர்மைக்கு பாத்திரமாக காண்பிக்கப்பட்டு வரும் ஆர்.எஸ் சிவாஜி, இறுதியில் வேறு கோணத்தில் காண்பிக்கப்பட்டது ஒருவித நெருடலையும், ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் இவ்வாறா இருக்கிறது என்ற கேள்வியையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் பின்னணி நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது. அந்தந்த காட்சியில் இருக்கும் அட்மாஸ்பியர் சவுண்டுகளை வைத்தே பின்னணி இசையை கோர்த்திருப்பது ஆடியன்ஸை கதைக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்து இருக்கிறது..தேவையில்லா இடங்களில் அமைதியையும், தேவையுள்ள இடங்களில் பின்னணி இசையையும் கொடுத்து தனது பணியை கனகச்சிதமாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.... கார்கி கொண்டாடப்பட வேண்டிய இறைவி.
ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!