’வால்பாறை டூர் போறீங்களா?’ - தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!
வால்பாறை உருவான வரலாறு தெரியுமா?. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் எப்போது அமைக்கப்பட்டது எனத் தெரியுமா? அது குறித்த சுவாரஸ்மான தகவல்கள் இதோ...
ஜாலியாக ஒரு டூர் போக வேண்டும் என நினைப்பவர்களுக்கு, சட்டென நினைவுக்கு வரும் இடங்களில் ஒன்று, வால்பாறை. வால்பாறை என்றதும் வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளும், பனி மூடிய மலைகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், குளிருக்கு இதமான தேநீரும் கண் முன்னே காட்சிகளாக விரிக்கும். இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வால்பாறை, சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் வால்பாறை உருவான வரலாறு தெரியுமா?. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் எப்போது அமைக்கப்பட்டது எனத் தெரியுமா? அது குறித்த சுவாரஸ்மான தகவல்கள் இதோ...
வால்பாறையின் வரலாறு
வால்பாறைக்கு தொடக்கத்தில் பூனாச்சி மலை என்ற பெயர் இருந்திருக்கிறது. ஆனைமலை காடுகளுக்கு வந்த ஆங்கிலேயர்களை, நவமலை வழியாக சமவெளிக்கு பாயும் ஆழியாறு ஆற்றுக்கு பின்னால் இருந்த மலைகளுக்கு பூனாச்சி என்ற மலை புலையர் சமூகத்தை சேர்ந்தவர் வழிகாட்டி அழைத்துச் சென்றிருக்கிறார். அவரை நினைவு கூறும் வகையில் பூனாச்சி மலை என அழைக்கப்பட்டுள்ளது.
பசுமையான காடுகள் வழியாக செல்லும் பாதைகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் எனவும், சில காடர் பழங்குடிகள் மட்டுமே வசிக்கின்றனர் எனவும் 1850 களுக்கு முன்பு வால்பாறை குறித்து ஆங்கிலேயர்களின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது. ஆனைமலை காடுகளில் டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளில் உயர்ந்து வளர்ந்திருக்கு வலிமையான தேக்கு மரங்களுக்காக ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்தனர். ஆனால் பூனாச்சின் மலையில் தேக்கு மரங்கள் குறைவான எண்ணிக்கையிலும், உகந்ததாகவும் இல்லாததால் காடழிப்பில் இருந்து சிறிது காலம் தப்பியிருந்தது. இருந்தாலும் தேயிலை மூலம் காடழிப்புக்கு உள்ளானது.
வால்பாறைக்கு தேயிலை வந்த கதை
’ஷென்னோங்’ என்ற சீன புத்தபிக்குவின் வெந்நீர் கோப்பையில் விழுந்த தேயிலையில் இருந்து முதல் தேநீர் உருவானது தற்செயலானது தான். அதன்பின்னர் திட்டமிட்ட உழைப்பினால் தேநீர் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக தேநீர் உற்பத்தியை கற்றுக் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேயிலை பயிரிட்டனர். அதில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்த வால்பாறையும் ஒன்று. இதற்கு இப்பகுதியில் நிலவிய குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை அதற்கு முக்கியக் காரணம்.
வால்பாறையில் தேயிலைக்கு முன்பாக காபி பயிரிடப்பட்டது. 1848 ம் ஆண்டில் கோபால்சாமி முதலியார் என்பவர் காபி பயிரிட்டார். அதனைத் தொடர்ந்து கர்னாடிக் கம்பெனி 1864 ல் காபி செடியை பயிரிட்டது. ஆனால் காபி பயிர் எதிர்பார்த்தபடி வளராததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தான் வால்பாறைக்கு தேயிலை கொண்டு வரப்பட்டது. 1860 களில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை மரங்கள் பயிரிடப்பட்டன.
இதற்கிடையில் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் முதல் மகனும், வேல்ஸ் இளவரசனும், பிரிட்டிஷ் இந்தியாவின் மகாராஜாவுமான ஏழாம் எட்வர்டு வால்பாறை வருவதாக இருந்தது. அக்காமலை புல்வெளிகளில் வந்து தங்கியிருந்து வேட்டையாட திட்டமிடப்பட்டு, குதிரைகள், யானைகளை பயன்படுத்தி பணிகள் நடந்தன. இதற்காக ஆங்கிலேயர்கள் தங்கியிருந்த பகுதி ’ஆங்கிலக்குறிச்சி கேம்ப்’ என்றழைக்கப்பட்டது. அது இப்போது அங்கலக்குறிச்சி என அழைக்கப்படுகிறது. ஏழாம் எட்வர்டின் குதிரை செல்வதற்காக மலைகளை வெட்டி வெட்டி வளைந்து நெளிந்து செல்லும் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஏழாம் எட்வர்டு பயணத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அவருக்காக போடப்பட்ட குதிரைப்பாதை தான் இன்று, 40 கொண்டை ஊசி வளைவுகளுடன் வளைந்து நெளிந்து வால்பாறைக்கு செல்லும் சாலையாக மாறியிருக்கிறது.
1890ம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்திடம் இருந்து விண்டில், நோர்டான் என்ற இரண்டு பிரிட்டிஷ்க்காரர்கள் யாருக்கும் பயன்படாத நிலம் எனக்கூறி ஒரு ஏக்கருக்கு 5 ரூபாய் கொடுத்து நிலங்களை வாங்கினர். இதையடுத்து இங்கிலாந்தில் இருந்து காபி, தேயிலை விவசாயத்தில் நிபுணரான இருந்த கார்வெர் மார்ஷ் மாதம் 250 ரூபாய் ஊதியம் கொடுத்து வரவழைக்கப்பட்டார். கவர்க்கல் பகுதியில் கையை நீட்டியபடி இருக்கும் சிலை இவருடையது தான். இவர் தான் மழைக் காடுகளை அழித்து தேயிலை பயிரிட முதல் காரணமாக இருந்தார்.
இதற்கு பிறகு ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு பல்வேறு எஸ்டேட்கள் உருவாக்கப்பட்டது. அங்கு பணி செய்ய மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டனர். வால்பாறையில் பயிரான தேயிலை உள்ளிட்டவற்றை தரைப்பகுதிக்கு கொண்டு செல்ல, அய்யர்பாடி பகுதியில் ஒரு ‘ரோப் வே’ என்ற கம்பி வழி சரக்கு கடத்தி பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 1920ல் மின்சார வாரியம் அட்டக்கட்டி முதல் வளைவில் இருந்து வாட்டர்பால் எஸ்டேட் வரை மின்சாரக் கம்பி அமைத்துள்ளார்கள். அங்கிருந்து அய்யர்பாடிக்கு தூண் கட்டி, ஆழியாரில் இருந்து மின்சாரம் கொண்டு வந்த அதே பாதையைப் பயன்படுத்தி, ரோவ் வே உருவாக்கியுள்ளார்கள். சாக்குப்பையைக் கம்பியில் தூக்கி விட்டால், அது கம்பி வழியாக கீழே சென்று விடும். இது பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இப்போதும் ஊமாண்டு முடக்கு பகுதியில் இரண்டு பெரிய தூண்கள் இருப்பதை பார்க்க முடியும்.
உலகில் தண்ணீருக்கு அடுத்து மக்கள் அதிகப்படியாக குடிப்பது தேநீர் தான். அந்த தேநீர் அங்கு பணியாற்றும் தேயிலை தொழிலாளர்களின் கடும் மழையிலும், குளிரிலும், அட்டைப்பூச்சி கடிகளுக்கும், வனவிலங்குகளின் தொந்தரவுகளுக்கும் இடையே கடும் உழைப்பினால் நாம் பருகும் தேநீர் நமது கைகளுக்கு வருகிறது. வால்பாறைக்கு அடுத்த முறை செல்லும் போது இவற்றையும் நினைவில் வைத்துச் செல்லுங்கள். வால்பாறை உங்களுக்கு புதியதாக தெரியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்