Marginalized student education : 125 மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பு; மராத்தியப் பழங்குடி மாணவரின் சாதனை!
என் அண்ணன் பள்ளிக்கூடம் செல்ல 12 கிமீ சைக்கிள் மிதித்துச் செல்வான்.ஒரு சிறுவனுக்கு கல்வி கிடைப்பது அத்தனைக் கடினமானதாக இருக்கக் கூடாது.அண்ணனுக்கும் எனக்கும் நேர்ந்த அனுபவங்கள் யாருக்கும் நேரக்கூடாது
ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தாங்கள் போராடத்தகுந்த மிகப்பெரிய பொருள் கல்விதான் என்பதை உணர்ந்துள்ளனர்
- பி.ஆர்.அம்பேத்கர்
அண்மையில் பிரிட்டனின் மிக உயரிய ஸ்காலர்ஷிப்பான ஷீவ்னிங் ஸ்கார்லர்ஷிப் பட்டத்தை மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜூ ஜீஜாபாய் ஆத்மராம் கேந்த்ரே வென்றார். உயர்படிப்பு படிக்கவிரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ ஸ்காலர்ஷிப்களில் இதுவும் ஒன்று. 28 வயதான ராஜூவுக்கு இதன்மூலம் தனது படிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவுக்காக ரூ,45 லட்சம் கிடைத்தது.இதன்மூலம் தனது தாய்மொழியான மராத்தியில் பயின்று இந்த ஸ்கலர்ஷிப்பை வென்றுள்ள முதல் நாடோடிப் பழங்குடி சமூக மாணவராகியிருக்கிறார் ராஜூ.
ராஜூ ஏகலவ்யா என்னும் அமைப்பையும் நடத்திவருகிறார். இந்த அமைப்பின் நோக்கமே இதுபோன்ற எட்டாத உயரத்தில் இருக்கும் உயர்கல்விகளை அதனைக் கனவாகக் கொண்டவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.இந்த ஏகலவ்யா அமைப்பு இதுவரை 125 மாணவர்களை உயர்கல்வி வரைப் படிக்க வைத்து அவர்களுக்கு ஸ்காலர்ஷிப்களையும் பெற்றுத்தந்துள்ளது.இதன்மூலம் படித்தவர்கள் தற்போது தங்களுடைய சொந்த வணிகத்தையே தொடங்கிவிட்டனர். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பிம்ப்ரி காந்தரே என்கிற கிராமத்தைச் சேர்ந்த ராஜூ வார்காரி சமூகத்தைச் சேர்ந்தவர். அம்மா, படிக்காதவர். அப்பா நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த விவசாயி. குழந்தைத் திருமணம் எழுதப்படாத சட்டமாக இருக்கும் இவர்களது சமூகத்தில் ராஜூவும் அவரது அண்ணனும் முதல்தலைமுறைப் பட்டதாரிகள்.சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட ராஜூவின் அண்ணன் மனைவியையும் அந்தக் குடும்பம் பட்டப்படிப்பு வரைப் படிக்க வைத்துள்ளது.
சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பைத் தொடர்ந்த ராஜூவுக்கு முதலில் மருத்துவம் படிக்கதான் ஆர்வம் இருந்துள்ளது. 12ம் வகுப்பு முடித்த சமயம் அந்த ஆர்வம் ஆட்சி நிர்வாகம் படிக்கவேண்டும் என்கிற ஆசையாக மாறியிருந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர் தனிப்பட்ட வாழ்வில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக சமூக வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நிரந்த வருமானத்துக்கு கால்செண்டரில் பணிபுரியத் தொடங்கினார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு டாடா இண்ஸ்ட்டியூட்டில் பட்ட மேற்படிப்புக்குச் சேர்ந்தார். அந்த அனுபவம்தான் பழங்குடி சமூகம் குறித்த தனது அறிவை மேலும் பண்படுத்தியாகக் கூறுகிறார் அவர். அதுதான் அவர் ஏகலவ்யா அமைப்பைத் தொடங்குவதற்கும் உந்துதலாக இருந்திருக்கிறது.
’எனது அண்ணன் பள்ளிக்கூடம் செல்ல தினமும் 12 கிமீ சைக்கிளை மிதித்துச் செல்வான். ஒரு சிறுவனுக்கு கல்வி கிடைப்பது அத்தனைக் கடினமானதாக இருக்கக் கூடாது.என் அண்ணனுக்கும் எனக்கும் நேர்ந்த அனுபவங்கள் மற்ற யாருக்கும் நேரக்கூடாது என எண்ணினேன். ஏகலவ்யா அமைப்பைத் தொடங்கினேன்’ என்கிறார் ராஜூ.
முதல்தலைமுறைக் கல்விபெறும் தாய்மொழி வழிக் கல்வி பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், வழிகாட்டுதல்களை இந்த ஏகலவ்யா அமைப்பு வழங்கி வருகிறது. கால்வா கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான கோபால் இந்த ஏகலவ்யா அமைப்பின் மூலம் பயனடைந்தவர்களில் ஒருவர். தினமும் 15 கிமீ தூரம் சைக்கிளில் பயணித்து பள்ளிக்கூடம் சென்று படித்த கோபாலுக்கு ஏகலவ்யா அமைப்புதான் மேல்படிப்பு படிக்க ஆபத்துதவியாகத் துணை நின்றிருக்கிறது.படிப்பை நிறுத்தச் சொல்லி பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியபோது அவர் படிப்பைத் தொடர உதவியிருக்கிறது ஏகலவ்யா.
’வாழ்ந்து பார்ப்பதன் வழியாகதான் எங்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடியும். புரிந்துகொண்டால்தான் அதனை மாற்ற முடியும். நாங்கள் எங்கள் சமூகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறோம்’ என்கிறார் ராஜூ.