இளமையா அழகா இருக்கணுமா? முதுமையை வேகப்படுத்தும் இந்த உணவுகளை தவிர்த்திடுங்க...
முதுமையை வேகப்படுத்தும் உணவுகள் எவை எவை என்பது குறித்துப் பார்க்கலாம்.
முதுமையை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாம். நம்மில் எல்லோருமே நம் வயதை விட சற்று இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்புவோம். அதற்காக சிலர் டயட் பாலோ செய்வதும் உண்டு. சிலர் மேக்கப் போட்டுக் கொள்வது மற்றும் நல்ல ஆடை உடுத்துவதன் மூலம் தங்களை நேர்த்தியாக காட்டிக் கொள்கின்றனர். நம் உடலில் முதுமை தோற்றம் ஏற்படும்போது அதை முதலில் நமது தோல் மற்றும் முடிதான் காட்டிக் கொடுக்கின்றது.
தோல் வயதான செயல்முறையை துரிதப்படுத்தக்கூடிய பல உணவுகள் இருந்தாலும், இதில் நாம் அடிக்கடி சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுகள் என்ன என்பது குறித்து தான் இப்போது நாம் பார்க்கப்போகின்றோம். இந்த உணவுகளை தவிர்த்தலும் இளமையாக இருக்க உதவும் என சொல்லப்படுகின்றது. அந்த உணவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்கள் வயதை வேகமாக்கும் 5 உணவுகள்:
1. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
அதிகப்படியான சர்க்கரை உண்பது, குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் என சொல்லப்படுகின்றது. அதிக சர்க்கரை உட்கொள்வதால் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சேதமடையும் என சொல்லப்படுகிறது. இதனால் தோலில் சுருக்கங்கள் மற்றும் தொய்வு ஏற்படும்.
2. வறுத்த உணவுகள்
ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள், அடிப்படையில் டிரான்ஸ் கொழுப்புகள், பெரும்பாலும் வறுத்த உணவுகளில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் ஆரோக்கியம் மற்றும் தோலில் தீங்கு விளைவிக்கும் என சொல்லப்படுகிறது. அவை கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், வயதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த உணவுகள் உங்களை நீரிழப்புக்கு வழி வகுக்கும் என சொல்லப்படுகின்றது.
3. அதிகப்படியான மது
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உங்களுக்கு விரைவாக வயதான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும். ஆல்கஹால் உடலை நீரிழப்புக்கு உட்படுத்துவதாகவும், இதனால் தோல் வறண்டு சுருக்கம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆல்கஹால் உட்கொள்வது சருமத்தின் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்துவதால் நீங்கள் உங்கள் வயதை காட்டிலும் சற்று வயது கூடுதலானவராக தெரிய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
4. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் அதிக அளவு சோடியம், சல்பைட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்த இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வதால் கொலாஜனை பலவீனப்படுத்தலாம், இது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5. கஃபைன்
டீ, காபியில் கஃபைன் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதுடன் சருமத்திற்கும் நல்லது என சொல்லப்படுகின்றது. ஆனால் அது அதிகமாக இருந்தால் அது உங்கள் சருமத்தை மோசமாகப் பாதித்து உங்களை முதுமையாக்கும்.
மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் உங்களை இளைமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும்.