உடலுறவுக்கு `நோ’ சொல்லும் பெண்களை அதிகளவில் ஏற்றுக் கொள்ளும் ஆண்கள்.. கேரளாவில் வெளியாகிய தரவுகள்!
சமீபத்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் படி, கேரளாவில் பெண்களை விட அதிகளவில் ஆண்கள், உடலுறவுக்காக பெண்கள் மறுப்பதை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் படி, கேரளாவில் பெண்களை விட அதிகளவில் ஆண்கள், உடலுறவுக்காக பெண்கள் மறுப்பதை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் உடலுறவின் போது பெண்கள் அதற்கான மனநிலை இல்லை என்று கூறினாலோ, சோர்வாக இருந்தாலோ, தங்கள் கணவர் தவறான நடத்தையுடன் இருந்தாலோ, பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அவற்றைக் காரணமாகக் காட்டி உடலுறவை மறுக்கும் போது, பெண்களைவிட அதிகளவில் ஆண்கள் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக இருப்பதாக இந்தக் கணக்கெடுப்பு கூறியுள்ளது.
சமீபத்தில் கேரளாவைப் பற்றிய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் வெளியான `பாலினத்தின் அடிப்படையிலான அணுகுமுறை’ என்ற பகுதியில், கேரள மாநிலத்தின் 75 சதவிகிதம் ஆண்களும், 72 சதவிகிதம் பெண்களும் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பெண்கள் உடலுறவை மேற்கொள்ள மறுப்பது தவறில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். எனினும், கேரளாவில் 31 சதவிகித ஆண்கள் மனைவி உடலுறவை மறுத்தால், வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு, மனைவி மீது கோபம் கொள்வதற்கு, மனைவிக்கு நிதியுதவியை மறுப்பது, வற்புறுத்தி உடலுறவு கொள்வது ஆகியவற்றில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தக் கணக்கெடுப்பில் உடலுறவுக்கு மறுக்கும் மனைவியைக் கணவர் அடிப்பதில் தவறில்லை என்று ஆண்களை விட அதிகளவில் பெண்கள் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் ஆனவர்கள் பட்டியலில், கேரளாவில் சுமார் 13.1 சதவிகிதப் பெண்கள், உடலுறவுக்கு மறுக்கும் பெண்களை அவர்களது கணவர்கள் தாக்குவது தவறில்லை எனக் கூறியுள்ளனர். திருமணமான கேரள ஆண்களுள் சுமார் 10.4 சதவிகிதம் பேர் மட்டுமே, இதனை ஆதரித்துள்ளனர். இதே கேள்விக்குத் திருமணம் ஆன பெண்களை விட சுமார் 8 சதவிகிதம் எண்ணிக்கையில் திருமணம் ஆகாத பெண்கள் குறைவாக ஆதரவு தந்துள்ளனர்.
கேரளாவில் பொது சுகாதாரச் செயற்பாட்டாளரும், மன நல மருத்துவருமான அருண் நாயர், கேரளப் பெண்கள் கணவரிடம் உடலுறவுக்கு மறுப்பதை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் இங்கு ஆழமாகப் பரவியுள்ள ஆணாதிக்கக் கலாச்சார மதிப்பீடுகளே என்று குறிப்பிட்டுள்ளார். `
பாலின விவகாரங்களை அணுகுவதில் இங்கு எப்போதும் பாகுபாடு நிலவியுள்ளது. வரலாற்று ரீதியாக, ஆண்கள் வேட்டைக்காரர்கள் என்றும், பெண்கள் வேட்டைப் பொருள்கள் என்றும் நிலவும் கற்பிதம் இன்றும் தொடர்கிறது. தற்போதைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இதுபோன்ற விவகாரங்களில் முற்போக்காக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்தோடு வாழ விரும்பும் இளம்பெண்களுக்கு எதிராக இருப்பது பெரும்பாலும் வீட்டில் உள்ள வயதில் மூத்த பெண்களே ஆவர். சிறு வயதிலேயே பெண்களுக்கு `கணவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது உன்னுடைய பொறுப்பு’ என்று கற்றுக் கொள்ளச் செய்யப்படுகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், `உடலுறவுக்கு மனைவி மறுப்பதால் வேறு துணையை ஆண்கள் தேடுவது என்பது மாறும் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது. திருமண உறவுகளில் கற்பொழுக்கம் பேணுவது தற்போது மாறியுள்ளது. ஆன்லைன் சமூக வளர்ச்சியால் பல தரப்புப் பாலியல் உறவுகளும் தற்போது கொண்டாடப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.