அன்னையர் தினம் 2022: இதை அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: நிதிப்பிரச்சினையை ஈசியாக கையாளுங்கள்!
Mothers Day 2022: எப்போதுமே அதை செய்! இதை செய் என கடிந்துக்கொண்டிருக்கும் அம்மாவை நினைத்து நாம் எரிச்சலடைவோம்.
நம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொதுவாகவே சேமிக்கும் பழக்கம் இருக்கும் . குறிப்பாக அம்மா. தனக்கு கிடைக்கும் வருமானம் அல்லது மாதாந்திர செலவிற்காக கிடைக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்கும் பழக்கமுடையவராக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடமிருந்து மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைப் பார்த்து கற்றுக்கொண்டிருக்கலாம். அம்மாக்கள் சொல்லிக்கொடுத்த , சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் சிலவற்றை அன்னையர் தினத்திலாவது அறிந்துக்கொள்வது அவசியமானது.
முதலில் சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதுதான் நம்பிக்கையின் ஆதாராம். அம்மாக்கள் பொதுவாக குழந்தைகள் பதின் பருவத்தை அடைந்தவுடனே, சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். அது வாழ்க்கையின் தேவை என்பதை தாண்டி கௌரவமாகவும் கருதுகின்றனர். எப்போதுமே அதை செய்! இதை செய் என கடிந்துக்கொண்டிருக்கும் அம்மாவை நினைத்து நாம் எரிச்சலடைவோம். உண்மையில் அம்மா வேலை செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம், தங்கள் குழந்தைகளுக்கு கடினமாக உழைத்து எப்போதும் ஊதியம் பெறுவது முக்கியம் என்று கற்பிக்கிறார்கள். இன்னும் சிலர் பிறந்தநாள் அல்லது பண்டிகை போன்ற பெரிய சந்தர்ப்பங்களில் செலவழிக்க உண்டியலில் பணத்தைச் சேமிக்கும்படி அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அளவு சிறியதாக இருந்தாலும், கற்றல் வாழ்க்கையை விட பெரியது.
சேமிப்பதில் எப்போதுமே நாம் ஒரு நீண்ட கால இலக்கினை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே பணத்தின் மதிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் மதிப்பைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே, நிதி இலக்குகளை நிர்ணயிப்பது, சேமிப்பைத் திட்டமிடுவது மற்றும் நீண்ட கால மற்றும் குறுகிய கால நிதி இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க முடியும். அப்போதுதான் நீங்கள் திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் பணத்தை செலவழிக்க முடியும் மற்றும் பெரிய நிதி இலக்குகளை அடைய முடியும்.
மாதாந்திரச் செலவுகளுக்காக அவர்களிடம் எவ்வளவு சிறிய நிதி இருந்திருந்தாலும், அவர்கள் சேமிப்பதற்குச் சிறிது மிச்சம் இருக்கும். நம்மில் பெரும்பாலோர் நம் தாய்மார்களிடமிருந்து நமது சேமிப்புப் பழக்கங்களைக் கற்றுக்கொண்டிருக்கலாம், மேலும் சிலர் சேமிப்பதற்கான முக்கிய வருடங்களான 20 வயதினை சராசரியாக தேர்வு செய்கின்றனர். அம்மாக்கள் எப்போதுமே மல்டி டாஸ்கிங் செய்யக்கூடியவர்கள் . நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும் மளிகை கடை பில் முதல் உங்களது ரேங்க் கார்ட் வரை அனைத்திலும் அதிக கவனம் செலுத்துவார்கள் .நீங்கள் வளர்ந்து, அதே பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிப்பதை கற்றுக்கொள்ளலாம் . வாழ்க்கையை எளிமையாக கடக்கவும் , சுதாரிப்புடன் இருக்கவும் பெரிய பெரிய நிதி வல்லுநர்களின் ஆலோசனைகள் எல்லாம் தேவையில்லை. அம்மாவிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.