Older Persons Day: உலக முதியவர்கள் தினம்... இனியாவது தொடங்கட்டும் பெரும் விவாதம்!
இந்தியாவில் மூத்த பெண் குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது (Feminisation of ageing). 1971ல் 1000 ஆண்களுக்கு 914 பெண் மூத்தகுடிமக்கள் இருந்த நிலையில், 2011ல் 1,033 ஆக அதிகரித்துள்ளது
![Older Persons Day: உலக முதியவர்கள் தினம்... இனியாவது தொடங்கட்டும் பெரும் விவாதம்! International Day of Older persons Need to tackle sterotypes prejudice and discrimination aasociate with Old age people Older Persons Day: உலக முதியவர்கள் தினம்... இனியாவது தொடங்கட்டும் பெரும் விவாதம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/6ddd7daf6158b8d81e34ec5ce42abefd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மூத்த குடிமக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், உலகம் முழுவதும் இன்று உலக முதியவர் தினம் கொண்டாடப்படுகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 சதவீதம் பேர் அதாவது 300 மில்லியனுக்கும் மேற்பட்டோர் (அதாவது, நாம் சந்திக்கும் 5ல் ஒருவர் ) மூத்த குடிமக்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுவான மக்கள் தொகை விகிதத்துடன் ஒப்பிடுகையில், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், பொருளாதார சிக்கல்களும் அதிகரிக்கத் தொடங்கும். இந்தியாவில், வரும் 2030ல் மூத்த குடிமக்களின் சார்பிநிலை விகிதம் 20.1 ஆக அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. தற்போது, இந்த எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
பொதுவாக, ஒரு சமூகத்தில் 0-14 வயதுடைய குழந்தைகளும், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களும் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்துள்ளனர். சார்புநிலை விகிதம் என்பது, வேலை செய்ய இயலாத வயதினரை, வேலை செய்ய இயலும் வயதினருடன் ஒப்பிடும் எண்ணிக்கை ஆகும். அதாவது, 2030ல் ஒவ்வொரு 100 வேலை செய்ய இயலும் வயதினருக்கு இணையாக 20 முதியவர்கள் இந்தியாவில் வசிக்க உள்ளனர். எனவே, எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதால், பொருளாதார அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டிய மிகப்பெரிய சவாலை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி;கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா,கோவா, பஞ்சாப், இமாச்சல் பிரேதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அதிகளவிலான முதியவர்கள் சார்பு நிலை விகிதத்தைக் கொண்டுள்ளன. எனவே, வரும் நாட்களில் முதியவர்களின் நலனை பேணிக்காக்கும் விதமாக மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, முதியவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையில் நலவுதவித் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும்.
பொருளாதாரத்தைத் தாண்டி, சமூக அளவிலும் மூத்த குடிமக்கள் எண்ணற்ற துயரங்களை அதிகரித்து வருகின்றன. நகரமயமாக்கல், தாராளமய பொருளாதாரக் கொள்கை, குடும்ப அமைப்பு சிதைவு போன்றவைகள் பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் 5ல் ஒரு முதியவர், பொருளாதார ரீதியாகவும், மனநல ரீதியாகவும் வன்முறையைச் சந்தித்து வருகின்றனர். குடும்ப வன்முறையின் அழுத்தத்தையும் வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் முதியோர்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து காணப்படுவதாக நான்காவது தேசிய மனநல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில், தேசிய மனநல கணக்கெடுப்பை, பெங்களூரில் உள்ள மனநல மற்றும் மூளை நரம்பியல் தேசிய மையம் (நிம்ஹன்ஸ்) மூலம் மத்திய அரசு நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மூத்த பெண் குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது (Feminisation of ageing). 1971ல் 1000 ஆண்களுக்கு 914 பெண் மூத்தகுடிமக்கள் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2011 இல் 1,033 ஆகவும், 2026 இல் 1,060 ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் குழந்தைகள் போன்றவர்கள். கூடுதல் கவனத்துடன் அவர்களைப் பராமரிக்க வேண்டும். அவர்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அவர்களின் முதுமையையும் இயலாமையையும் காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது சமுதாய சீர்கேடாகும். நாடுமுழுவதும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எந்த அர்த்தத்தில் தர்கத்தில் முதியோர் இல்லத்தை இந்த சமூகம் நியாயப்படுத்துகிறது. முதுமையையும் இயலாமையையும் வாழ்வின் ஒரு அங்கம் என்று எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். இல்லை, முதுமையும், இயலாமையும் ஒரு பிரச்சனை தான் என்று இந்த சமூகம் ஒத்துக் கொண்டு அதற்கேற்ற தீர்வுகளை தேட முயற்சிக்க வேண்டும். எந்தவித் விவாதமும், பெருங்கதையாடலும் இல்லாமலும் மௌனமாய் கடந்து செல்வது நமது உணர்வற்ற நிலையைக் காட்டுகிறது.
மேலும், வாசிக்க:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)