Facial Pores : முகத்துல துளைகள் கண்கூடா தெரியுதா? இந்த பொருட்களே போதும்.. இந்த பிரச்சனை பறந்துபோகும்..
பொதுவாக சரும துளைகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினம், ஆகவே இயற்கையான வீட்டு வைத்தியங்களை செய்யும்போது சருமத் துளைகளை குறைத்து முகத்திற்கு அழகு சேர்க்கலாம்.
எல்லோருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம், அதுவே சிலரின் தன்னம்பிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சிலரின் முகத்தில் மட்டும் சரும துளைகள் அதிக அளவில் காணப்படும். சிறிய துளைகள் மற்றும் பெரிய துளைகள் என இவை இருப்பதால் முகத்தை பராமரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
சரும துளைகள் இயல்பானது என்றாலும் இது முகப்பருக்கள் அல்லது மரபு ரீதியாக வந்தவையாக கூட இருக்கலாம். ஆகவே இயற்கை முறையிலான வீட்டு வைத்தியங்களை நாம் செய்வதன் மூலம் இந்த சரும துளைகளை சரி செய்து கொள்ளலாம்.
இந்த சரும துளைகளை ஏன் சரி செய்ய வேண்டும் என பார்க்கும்போது ,ஒன்று முகத்தின் அழகு குறைந்துவிடும் ,அடுத்தது அந்த சரும துளைகளில் தூசு, அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் நுழைந்து பருக்கள், கொப்பளங்கள், அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் சரும பராமரிப்பு அவசியமாகின்றது.
பொதுவாக சரும துளைகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினம், ஆகவே இயற்கையான வீட்டு வைத்தியங்களை முறையாக செய்யும்போது இந்த சருமத் துளைகளை குறைத்து முகத்திற்கு அழகு சேர்க்கலாம்.
ஐஸ் கட்டிகள்:
சருமத்தில் உள்ள துளைகளுக்கு ஐஸ் கட்டியை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் சிறந்த வழிமுறை என கூறப்படுகிறது. இது சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது, எந்த பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை இது பராமரிக்கிறது. ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த ஐஸ் கட்டிகளை சில நிமிடங்கள் திறந்த துளைகள் உள்ள இடங்களில் அல்லது முகம் முழுவதும் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இந்த ஒத்தடம் முகத்தில் திறந்த துளைகளை சீக்கிரமாக நீக்கி உதவி செய்கிறது.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டை வெள்ளைக்கரு என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒரு உணவுப் பொருளாகும். சரும துளைகளுக்கு இந்த முட்டை வெள்ளை கருவை தடவும் போது ,அது முழு சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வழி செய்கிறது.
முட்டையில் புரதம் மற்றும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.அவை சருமத்தில் விரிந்துள்ள துளைகளை சுருக்குவதற்கு உதவுகிறது. வெள்ளைக்கருவை முகத்திற்கு பூசும்போது அது சருமத்தை இறுகச் செய்கிறது.
சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து பாதுகாப்பை வழங்குகிறது. முட்டையின் வெள்ளைக்கரு தினசரி தோல் பராமரிப்புக்கு ஒரு சிறந்த பொருளாகும். முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பிசுக்கை நீக்கி , சரும துளைகளை சுத்தம் செய்கிறது.
முல்தானி மெட்டி:
முகத்திற்கு தொல்லை தரும் சரும துளைகளை நீக்குவதற்கு முல்தானிமெட்டி ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.
இயற்கை மூலப்பொருளான முல்தானிமெட்டி முகத்தில் உள்ள அழுக்கு, வியர்வை மற்றும் அசுத்தங்களை அகற்றி ,திறந்த துளைகள் மற்றும் பருக்களை இல்லாதொழிக்கிறது.
ரோஸ் வாட்டருடன் முல்தானி மெட்டியை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் முகம் முழுவதும் பூசி காய விட வேண்டும்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். முல்தானி மெட்டியும், ரோஸ் வாட்டரும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுகிறது. சரும துளைகளை சரி செய்து கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
சமையல் சோடா:
பேக்கிங் சோடாவில் லேசான ஆண்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இது சருமத்தில் உள்ள துளைகளை நீக்கி சரி செய்கிறது. சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி, தோல் பராமரிப்பு முறைகளில் பேக்கிங் சோடா முக்கியத்துவம் பெறுகிறது.
மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை ,இரண்டு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரில் கலந்து முகத்தில் பூசி பின்னர் சிறிது நேரம் வைத்து குளிர்ந்த நீரால் சுத்தம் செய்யவும்.
தக்காளி ஸ்க்ரப்:
தக்காளி எப்போதுமே சருமத்திற்கு அழகை கொடுக்கும் ஒரு உணவுப் பொருளாகும். தக்காளியில் உள்ள லைகோபீன் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்பு சருமத் துளைகளை நீக்கி அவை மீண்டும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்ட தக்காளி, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றி சரும துளைகளை நன்கு இறுகச் செய்யும். ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றில் மூன்று முதல் நான்கு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம் முழுவதும் பூசி சிறிதாக மசாஜ் செய்து ஒரு 15 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )