Chicken Gravy: பத்தே நிமிடத்தில் ரெடியாகும் செமி சிக்கன் கிரேவி.. செம டேஸ்டியா செய்வது இப்படித்தான்..!
பேச்சுலர்ஸ் சிக்கன் சமைக்க வேண்டும் என்றாலோ, தக்காளி மற்றும் வெங்காயத்தை தாளிக்க நேரம் இல்லாத போது இது போன்ற செமி சிக்கன் கிரேவி செய்து கொள்ளலாம்.
விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோர் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் பழக்கம் இருக்கும். விடுமுறையில் தான் அசைவ உணவுகளை சமைப்பதற்கான நேரம் இருக்கும் என்பது பலரின் கருத்து. சிலருக்கு அசைவ உணவு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அதை செய்வதற்கே பெரும் சிரமத்தை எடுத்து கொள்வதாக உணர்வார்கள். வேலை நாட்களில் அசைவ உணவு சமைக்க நேரம் இல்லை என கருதுபவர்களும், ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே கறி எடுத்து சமைக்க முடியும் என நினைப்பவர்களுக்கு எளிமையாக தாளிக்காமல் பத்தே நிமிடங்களில் சிக்கனை சமைக்கும் ரெசிபி உங்களுக்காக. இந்த சிக்கன் கிரேவியை பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்து விடலாம்.
சிக்கன் கிரேவி செய்வதற்கான பொருட்கள்
இரண்டு சிறிய துண்டு பட்டை, இரண்டு இலவங்கம் சேர்த்த இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு, சிக்கன் - கால் கிலோ, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 3, சிக்கன் 65 மசாலா தூள் - தேவையான அளவு, மிளகுத்தூள், வரமிளகாய் மற்றும் மல்லித் தூள் - தேவையான அளவு, மஞ்சள் தூள்- தேவையான அளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு, கொத்தமல்லி - ஒருபிடி
சிக்கன் கிரேவி செய்யும் முறை
மிக்சியில் இஞ்சிப்பூண்டு, பட்டை இலங்கம் விழுதை சேர்த்து, அதனுடன் தக்காளியை நறுக்கி போட்டு கொள்ள வேண்டும். அதனுடன் காரத்திற்கு ஏற்ப சிக்கன் 65 தூள், மிளகாய் தூள், ஓரு ஸ்பூன் மல்லித்தூள், மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து மாசாலாவை அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் நன்றாக சுத்தம் செய்த சிக்கனை போட்டு, அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும். கிரேவின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி அந்த கலவையில் போட வேண்டும்.
இறுதியாக கடாயில் இருக்கும் சிக்கன் கலவையை எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு, அதன் மேல் நல்லெண்ணெயை ஊற்றி மூடிட வேண்டும். கிரேவி நன்றாக கொதித்து, சிக்கன் ரெடி ஆனமும், கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.
சப்பாத்திக்கு சூப்பரான சிக்கன் கிரேவி
சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும் என்றால் செமி அளவில் சிக்கன் கிரேவியை இறக்கி விடலாம். சாம்பார் அல்லது ரசம் சாப்பாட்டிற்கு சைடிஷாக வேண்டும் என்றால் சிக்கனை சுக்காவாக செய்து இறக்கி விடலாம். இந்த சிக்கன் கிரேவியை சப்பாத்திக்கு வைத்து சாப்பாட்டால் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.
அவசரமாக சிக்கன் சமைக்க வேண்டும் என்றாலோ, தக்காளி மற்றும் வெங்காயத்தை தாளிக்க நேரம் இல்லாத போது இது போன்ற கிரேவி செய்து கொள்ளலாம்.