“மனசோர்வு இருந்தால் சாதாரணமாக விட வேண்டாம்; புற்றுநோய்க்கு வாய்ப்பு” - மருத்துவர்கள் எச்சரிக்கை
உடலில் ஃபோலிக் அமிலம் குறைந்தால் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் மருத்துவர்கள், ஃபோலிக் அமிலம் உள்ள உணவை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மனசோர்வு ஏற்பட்டாலோ, உடல் எடை குறைந்து தசைகள் பலவீனமாக காணப்பட்டாலோ அலட்சியமாக எடுத்து கொள்ள வேண்டாம். ஏனெனில், அது ஃபோலிக் அமிலத்தின் குறைபாடாக இருக்கலாம். ஃபோலிக் அமிலம் குறைவதை சாதாரணமாக எடுத்து கொண்டால் பின் விளைவுகள் மிகவும் கடினமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வைட்டமின் பி9 எனப்படும் ஃபோலிக் அமிலம் அல்லது ஃபோலேட் மனிதனுக்கு தேவைப்படும் முக்கியமான வைட்டமின். இயற்கையாக நீரில் கரையக்கூடிய இந்த விட்டமின், உடலில் குறைந்தால் அதன் விளைவுகள் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய அளவில் இருக்கும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
டிஎன்ஏ வளர்ச்சிக்கு உதவும் ஃபோலிக் அமிலம்:
கருவுற்றிருக்கும் பெண்கள் ஆரம்ப காலத்தில் குழந்தையின் மூளை மற்றும் தண்டு வடத்தின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க ஃபோலிக் அமிலம் சரியான விகிதத்தில் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஃபோலிக் அமிலம் டிஎன்ஏ மற்றும் மரபணு பொருட்களை உருவாக்க உதவக்கூடியது. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமலம் இருக்கும் உணவை எடுத்து கொள்ள வேண்டும். மரபணு வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல், உடலின் புரத வளர்ச்சிக்கும், ஹீமோகுளோபினை அதிகரிப்பதிலும் ஃபோலிக் அமிலம் உதவிப்புரிகிறது. இதனால், ஒரு மனிதனுக்கு தினமும் 400மைக்ரோ கிராம்ஸ் ஃபோலேட்ஸ் தேவை என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றனர்.
குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்:
இதன் அளவு குறையும் போது, உடலில் அதற்கான விளைவுகள் அதிகமாகவே ஏற்படுகிறது. உதாரணமாக ஃபோலிக் அமிலம் குறைந்தால் அனீமியா, உடல் சோர்வு, மனசோர்வு, பக்கவாதம், நினைவாற்றல் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, ஒருவருக்கு ஃபோலேட் குறைபாடு இருந்தால் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
ஃபோலிக் அமிலம் குறைபாடு அறிகுறிகள்:
ஃபோலிக் அமிலம் குறைவாக இருப்பதை காட்டும் அறிகுறிகள் உள்ளன. அதாவது, ஃபோலேட் குறைபாடு உள்ளவர்களுக்கு நாக்கு சிவந்து காணப்படும். வாய் புண்கள், உணவின் சுவை குறைதல், நினைவாற்றல் இழப்பு, கவனம் குறைதல், பார்வை குறைபாடுகள், மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும் தசைகள் பலவீனமாவதுடன், உடல் எடையும் குறையும். இந்த அறிகுறிகளிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகள்:
ஃபோலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஃபோலேட் குறைபாட்டைத் தடுக்கலாம். உதாரணத்துக்கு பட்டாணி, பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சை இலை காய்கறிகள், காளான்கள், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் உள்ள பழங்கள் போன்றவை.