Kumbakonam Kadappa: இட்லிக்கு சட்னியும், சாம்பாரும் மட்டும்தானா? கும்பகோணம் கடப்பா ரெசிப்பி இதோ.. ஒருமுறை டேஸ்ட் பண்ணுங்க..
சுவையான கும்பகோணம் கடப்பா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்... இட்லி, தோசைக்கு சட்னி சாம்பார் மட்டும் போதுமா என்ன?
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு -1 கப்
பச்சை மிளகாய்-4
உருளை கிழங்கு-1
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
இஞ்சி -1 துண்டு
பூண்டு- 3 பற்கள்
சோம்பு-1/2 ஸ்பூன்
பொரிகடலை -1/4 ஸ்பூன்
கசகசா-1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
துருவிய தேங்காய் -1/4 கப்
தாளிப்பதற்கு
எண்ணெய்-2 ஸ்பூன்
சோம்பு -1/2 ஸ்பூன்
பட்டை-2
லவங்கம் -2
பிரியாணி இலை-1
கறிவேப்பிலை-1 கொத்து
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சை சாறு -1/2 ஸ்பூன்
மல்லித்தழை-1 கையளவு
செய்முறை
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் பாசி பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, 2 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பாதியாக வெட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து, இரண்டையும் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து வெட்டிக்கொள்ள வேண்டும். பின் வெந்த பாசிப்பருப்பை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.
மிக்சி ஜாரில் சிறிது சோம்பு,கசகசா,பொரிகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும்,பட்டை, லவங்கம், சோம்பு மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது இதனுடன், மசித்து வைத்துள்ள பருப்பு,வேக வைத்துள்ள கிழங்கு, சிறிது உப்பு சேர்த்து கிட்டதட்ட 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்ததும் எலுமிச்சை சாறு,மற்றும் மல்லித்தழை சேர்த்து இறக்கினால் கலந்து விட்டு இறக்கினால், சுவையான கும்பகோணம் கடப்பா தயார்.