Avocado Banana Smoothie: ஊட்டச்சத்து மிகுந்த அவகோடா ஸ்மூதி - ரெசிபி இதோ!
Avocado Banana Smoothie: அவகோடா ஸ்மூதி எப்படி செய்வது என்று கீழே காணலாம்.
கோடை வந்தாச்சு. உடலின் வெப்பநிலையை சமன்படுத்த, குளிர்ச்சியாக வைத்துகொள்ள நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைகக்ப்படுகிறது. அதோடு, வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு சாப்பிடுவது என்பது குறைந்துவிடும். அப்படியிருக்கும்போது, சிலர் அதிகமாக திரவ உணவுகளைவே விரும்பவர். அவர்களுக்கு ஸ்மூதி ஒரு சிறந்த தேர்வு, இது கோடை காலத்திற்கு மட்டுமல்ல. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஊட்டச்சத்து மிகுந்த அவகாடோ, வாழைப்பழம் வைத்து ஸ்மூதி செய்முறையை காணலாம்.
அவகோடா - வாழைப்பழ ஸ்மூதி
என்னென்ன தேவை?
அவகோடா - 2 பழம்
வாழைப்பழம் - 1
தேன் - தேவையான அளவு
பால் - 1/4 லி
துருவிய பாதாம் - சிறிதளவு
செய்முறை:
அவகோடாவை தோல் நீக்கி எடுக்கவும். வாழைப்பழத்தையும் தோல் நீக்கவும். இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு, அதோடு இனிப்பு தேவைப்படும் அளவுக்கு தேன் சேர்க்கவும். இப்போது பால் சேர்த்து அரைக்கவும். மிக்ஸியை தொடர்ந்து அரைக்க வேண்டாம். சில நொடிகள் விட்டு விட்டு அரைக்கவும். quick mix மோட் என்றும் சொல்லலாம்.
ஏனெனில், நன்றாக மைய அரைக்க வேண்டும் என்றில்லை. பால், அவகோடா, வாழைப்பழம் மூன்றையும் நன்றாக மிக்ஸ் மட்டுமே செய்தாலே அது நைஸாக வந்துவிடும். இதோடு துருவிய பாதாம், முந்திரி, திராச்சை என உங்களுக்குப் பிடித்த நட்ஸ், சூரியகாந்தி, பூசணி விதைகள் கூட சேர்க்கலாம். சீட்ஸ் வகைகளில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது.
காலை உணவு, உணவு நேரத்திற்கு முன்பான ஸ்நாக்ஸ் என எல்லா நேரங்களிலும் இதை செய்து அருந்தலாம்.
அவகோடா
அவகோடாவில் உள்ள சத்துக்கள் உடல்நலனுக்கு அவசியமானவை. இதில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து, பொட்டாஷியம், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்து உள்ளன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆராய்ச்சிகளின் முடிவுகளில் அவகோடா இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவகோடா பழங்களை உணவில் சேர்த்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
நார்ச்சத்துடன் சேர்ந்து மேலும் பல பலன்களைக் கொண்டிருக்கும் இந்த அவகோடா உடலுக்குத் தேவையான சத்துகளை ஒருசேர எடுத்துக் கொடுப்பதில் தனித்து விளங்குகிறது. அதோடு, நார்ச்சத்து அதிகம் என்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் நினைப்பவர்களும் இதை உணவில் சேர்த்துகொள்ளலாம். அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை தவிர்க்கும். வயிறு நிரம்பியிருக்கும் திருப்தியை அளிக்கும்.
அவகோடாவில் ஸ்மூதி மட்டுமல்ல, டோஸ்ட், தோசை, க்ரேவி, சாலட் உள்ளிட்டவைகளையும் செய்யலாம். அவகோடா DIP கூட செய்து நாச்சோ உடன் சாப்பிடலாம்.
அவகோடா ஐஸ்க்ரீம் செய்ய என்னென்ன தேவை?
அவகோடா - ஒரு கப்
விப்பிங் க்ரீம் / க்ரீம்/ கண்டன்ஸ்ட் மில்க் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
வெனிலா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (தேவையெனில்)
பொடியாக துருவிய பாதாம், பிஸ்தா, வால்நட், திராச்சை - ஒரு கப்
செய்முறை
மிக்ஸி சாரில் விப்பிங் க்ரீமை / ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை, வெனிலா எசென்ஸ், தேவையெனில் இதோடு பால் பவுடர் சேர்க்கலாம். இதை நன்றாக அரைக்கவும். பீட்டர் இருந்தால் அதை பயன்படுத்தியும் செய்யலாம். நன்றாக பீட் செய்த பிறகு, தோல் நீக்கிய அவகாடோவை சேர்க்கவும். நன்றாக பீட் செய்ததும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மீது துருவிய நட்ஸ்களை சேர்க்கவும். இதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மேலே சாக்லெட் சிரப் சேர்க்கலாம். அவ்ளோதான் அவகோடா ஐஸ்க்ரீம் ரெடி.