Diwali: இந்த தீபாவளிக்கு சிரோட் செஞ்சு அசத்துங்க..! செம ருசி இது..
சிரோட் இனிப்பு பலகாரம் தென்னிந்தியாவை பொறுத்தவரை இது ஒரு புதிய வகை இனிப்பு தான்.
தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் தென்னிந்தியாவை பொறுத்தவரை அதிரசம், சோமாஸ், சீடை ,அல்வா லட்டு என பல்வேறு வகையான இனிப்புகள் செய்யப்படுகின்றன. ஆனால், வடமாநில மக்களை பொறுத்தவரை சற்று வித்தியாசமாகவே அவர்கள் இனிப்பு பலகாரங்களை செய்து தீபாவளி கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா பகுதிகளில் பிரபலமான சீரோட் என்னும் இனிப்பு வகை எவ்வாறு செய்வது என நாம் பார்க்கலாம்.
இந்த சிரோட் இனிப்பு பலகாரம் பார்ப்பதற்கு பரோட்டா போல் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. இது நேரடியாகவே எண்ணெயில் வறுத்து எடுக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. தீபாவளி கொண்டாடுவது என்றாலே இனிப்புகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனாலும் புதுவகையான இனிப்புகளை செய்து விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி கொண்டே இருக்கும். இந்த சிரோட் என்ற இனிப்பு பலகாரம் வட மாநில மக்களுக்கு புதியதல்ல ஆனால் தென் இந்தியாவை பொருத்தவரை இது ஒரு புதிய வகை இனிப்பு தான்.
இந்த சிரோட் பலகாரத்தை நாம் வீடுகளிலேயே எளிமையாக தயாரிக்கலாம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் பிரபலமான இந்த உணவு, இனிப்பு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். இந்த சிரோட் இனிப்பு பலகாரத்தை செய்ய சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நாம் இதை செய்து கொள்ளலாம்.
சிரோட் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1.5 கப் மைதா மாவு
1/4 கப் ரவை
நெய் 6 தேக்கரண்டி
4 கப் சர்க்கரை
பால் 2-4 தேக்கரண்டி
4-6 பச்சை ஏலக்காய்
1 கப் சோள மாவு
உப்பு ஒரு சிட்டிகை
சர்க்கரை பாகு
அழகுபடுத்த பிஸ்தாவை
ஆழமாக வறுக்க எண்ணெய்
மாவுக்கு தண்ணீர்
செய்முறை:
1. முதலில் சீரோட் இனிப்பை செய்வதற்கான மாவை பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.
2 . மைதா, ரவா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு சூடான நெய்யை இந்தக் கலவையில் ஊற்றி பிசையத் தொடங்க வேண்டும். அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கலாம். நன்கு பிசையும் போது கைக்கு ஒட்டாதவாறு சற்று மென்மையான உருண்டைகளாக பிடிக்கும் அளவுக்கு மாவு பதத்துடன் இருக்கும். பிசைந்த மாவு கலவை தயாரானதும் மூடி 10-15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.
3 பின்னர் மேலும் ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் அரை வெப்பநிலை உடைய நெய்யை சேர்க்க வேண்டும். மென்மையான, அடர்த்தியான பேஸ்ட் உருவாகும் வரை அவற்றை ஒன்றாக நன்கு பிசைய வேண்டும்.
4. இதற்கிடையே சர்க்கரை பாகை தயார் செய்து கொள்ள வேண்டும். சர்க்கரையை இரண்டு கப் தண்ணீரில் கலந்து மிதமான தீயில் சூடாக்கும் போது மிதமான சர்க்கரை பாகு தயாராகிவிடும்.
5.பின்னர் மிக்ஸியில் ஏலக்காயை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் இனிப்புக்கு நறுமணம் சேர்க்கும் பொருட்கள் மற்றும் கருஞ்சீரகத்தை தனித்தனியே எடுக்கவும்.
6. பின்னர் கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக பால் கலந்து மீண்டும் பிசையவும்.
7. பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து நான்கு சப்பாத்திகளை தயார் செய்ய வேண்டும்.
8. செய்து வைத்திருக்கும் சப்பாத்தி போன்ற வட்ட வடிவ மாவில் நெய் மற்றும் சோள மாவு பேஸ்ட்டை அதன் மேல் வைத்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
9. தட்டையாக்கிய மாவை நன்கு உருட்டி மீண்டும் ஒரு லேயரை அதன் மேல் ஒட்ட வேண்டும். ஒரு உருளையால் அதை நன்கு உருட்டி எடுக்க வேண்டும்.
10. பின்னர் தயார் செய்யப்பட்ட ரோல் வடிவ மாவை ஒரு அங்குள்ள இடைவெளியில் துண்டு துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
11. வெட்டி எடுக்கப்பட்ட மாவு துண்டுகளை கைகளால் நன்கு தட்ட அது லேயர்களை உருவாக்கும். அது வட்ட வடிவ பரோட்டா வடிவில் இருக்கும்.
12. பின்னர் நன்கு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். மேலும் வறுத்தெடுத்த பின்னர் சர்க்கரை பாகில் இட்டு நன்கு ஊற விடவும்.
13. தயார் செய்யப்பட்ட சிரோட் இனிப்பின் மேல் தூள் சர்க்கரை, பிஸ்தா உலர்ந்த பழங்களால் அலங்கரிக்கலாம்.