Orange Ice Cream: கெமிக்கல் இல்லாத டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் க்ரீம்! வீட்டிலே செய்வது எப்படி?
கெமிக்கல் இல்லாத சுவையான ஆரஞ்சு ஐஸ் க்ரீம் எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
ஒரு முழு ஆரஞ்சை எடுத்து அதன் மேல் பகுதியை மட்டும் கேப் போன்று வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடிப்பகுதியில் இருக்கம் ஆரஞ்சின் தோல் உடையாமல் முழுவதுமாக நமக்கு வேண்டும். இப்போது ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சதை பகுதியை மட்டும் ஸ்பூன் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சதைப்பகுதியை முழுவதுமாக எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் பெரும்பாலான சதை பகுதியை எடுத்து விட வேண்டும்.
இந்த அடி மற்றும் மேல் பகுதி தோலை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். இந்த பால் வற்றி பால் கோவா ஆவதற்கு முன்புள்ள நிலையான க்ரீம் பதம் வர வேண்டும். க்ரீம் பதம் வந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு சிறிது, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை 15 நிமிடம் ஆற விட வேண்டும். இது இப்போது இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.
இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் ஒரு பாத்திரத்தில் கைகளை பயன்படுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த ஜூசை நாம் க்ரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, பின் இதை நாம் உடையாமல் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலினுள் கரண்டியை பயன்படுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.