Cybercrime: ஆபாசப் பட மிரட்டல்... சிக்கும் இளம்பெண்கள்- உளவியல் காரணங்களும், மீட்கும் வழிகளும்..!
இளம்பெண்களை ஏமாற்றி உடல், பொருள், ஆதாயம் தேடும் குற்றவாளிகள் குறித்துத் தொடர்ந்து செய்திகளில் வெளியானாலும், பல்வேறு பெண்கள் தொடர்ந்து ஏமாறுவதும், ஏமாற்றுவதும் தொடர் கதையாவது ஏன்?
செய்தி 1: சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஷ்வா (29) காதலிப்பதாகக் கூறிப் பழகியுள்ளார். அவரை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, 'நிர்வாணப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டி 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், மடிக்கணினி, ஐபோன் ஆகியவற்றைப் பறித்துள்ளார்.
செய்தி 2: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஃபயாஸ் (24) என்பவர், வேறோர் இளைஞரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தன்னுடைய படம்போல மாற்றிப் பதிவிட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பணம் பெற்றுள்ளார்.
செய்தி 3: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் மகன், திருச்சியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, ஏமாற்றி குழந்தைத் திருமணம் செய்துள்ளார். வீடியோ எடுத்து மிரட்டியதுடன், சிறுமியின் தாயையும் தவறான நோக்கத்திற்கு அழைத்துள்ளார்.
செய்தி 4: ஊட்டி அருகே குன்னூர் தேயிலை எஸ்டேட் பெண் உரிமையாளரான 67 வயது மூதாட்டியிடம், இங்கிலாந்தில் இருந்து பரிசு அனுப்புவதாகக் கூறி மும்பையைச் சேர்ந்த விஷால் பாபா ரூ.73 லட்சத்தை அபகரித்துள்ளார்.
சமூக வலைதளக் காலகட்டத்தில் இளம்பெண்களை மோசடி செய்து உடல், பொருள், ஆதாயம் தேடும் குற்றவாளிகள் குறித்து அடிக்கடி செய்திகளில் வெளியானாலும், பல்வேறு பெண்கள் ஏமாறுவதும், ஏமாற்றுவதும் தொடர் கதையாவது ஏன் என்று விரிவாகப் பேசுகிறார் உளவியல் மருத்துவர் அசோகன்.
''தான் ரசிக்கப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மனிதர்களின் இயல்பு. அந்த உணர்வை சிலர் ரகசியத் தூண்டிலாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தன்னுடைய வலையில் யார் விழுந்து, ஏமாறுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலும் இளம்பெண்கள், துணையைப் பிரிந்து வாழ்வோர், வயதான செல்வந்தர்கள்தான் மாட்டிக் கொள்கின்றனர்.
அதேபோலப் பொறுப்புகள் இல்லாத அன்பு (Love without Responsibilities/ Commitments) பலரை ஈர்க்கிறது. இதுதான் இத்தகைய உறவுகளை ஊக்குவிக்கிறது.
எப்படித் தொடங்குகிறது?
முதலில் உங்களின் புகைப்படங்களுக்கு லைக்கிடுபவர்கள், மெல்ல மெல்ல அக்கறையுடன் பேச ஆரம்பிப்பார்கள். குடும்ப, தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வார்கள். அதில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தகட்டமாகப் புகைப்படங்களைப் பகிர்வார்கள். எதிர்த் தரப்பில் பெண்ணின் புகைப்படங்களைப் பகிரச் சொல்வார்கள். இந்த செயல்முறை அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்று, மோசடியில் முடிகிறது.
உதாரணத்துக்கு, 'நான் உன்னை விரும்புகிறேன். வீட்டில் பிரச்சினை. உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்'. 'நான் கஷ்டத்தில் இருக்கிறேன். தொழிலில் நட்டம் ஆகிவிட்டது. இப்போது உதவி செய்தால், உடனடியாக மீள முடியும்!' என்றெல்லாம் உணர்வுப்பூர்வமாகப் பேசி உடலியல் ரீதியாகவும் பொருளாதார வகையிலும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
கண்டுபிடிப்பது எப்படி?
பெண்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவர்கள். அதுதான் அவர்களின் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. 'Men love women for sex and Women give sex for love' என்பது புகழ்பெற்ற மருத்துவர் பிரகாஷ் கோத்தாரியின் கூற்று. அன்பாலும் இரக்கத்தின்பேரிலும் உணர்வுப்பூர்வமாக தன்னையே ஒப்புக்கொடுக்கிறாள் பெண்.
பாதுகாப்பு அம்சங்களில் பெண்கள் அதிக கவனமாக இருப்பார்கள். அதேநேரத்தில் அவர்கள் ஏதேனும் பிரச்சினையிலோ, தனிமையிலோ, உடைந்த தருணத்திலோ இருக்கும்போது, நமக்குப் பிடித்த தோற்றத்தில், வேலையில், சமூகத்தில் மேம்பட்ட நிலையில் இருப்பவராகக் காண்பிப்பவரிடம் இருந்து, நட்புக் கோரிக்கைகள் வரும்போது எதையுமே யோசிக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.
அதனால் ஆன்லைன் உறவுகளில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். நேரில் எப்போதுமே தீர விசாரித்து, உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்'' என்று மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் போலியாக இயங்கி, மோசடி செய்பவர்களிடம் இருந்து எப்படித் தற்காத்துகொள்ளலாம் என்று சைபர் குற்ற சைபர் கிரைம் நிபுணரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் 'ஏபிபி நாடு'விடம் பேசினார்.
''சமூக வலைதளங்களில் தொடர்ந்து உங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுகிறீர்கள் என்றாலே உங்களின் பிரைவஸியை மறந்துவிட வேண்டும். பொதுவெளியில் இயங்கும் ஒரு நபராக மாறுகிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
ஆன்லைன் கணக்குகளை (Profile) மட்டுமே வைத்து எதையும், யாரையும் நம்பாதீர்கள். அதிலேயே எந்த ஓர் உறவையும் உருவாக்க முயலாதீர்கள். ஆன்லைனில் மோசடி செய்யும் குற்றவாளிகள், ஏற்கெனவே திட்டமிட்டுத்தான் உங்களை வலையில் விழவைக்க முயற்சிக்கிறார்கள்.
குற்றவாளிகள் என்றதும் எங்கோ தூரமாக, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என்று எண்ண வேண்டாம். அவர்கள் உங்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கலாம். உடன் படித்துக் கொண்டிருக்கலாம். உங்களின் குணம் அறிந்து, அதற்கேற்ற வகையில் வேறு கணக்கில் இருந்து பேச முயற்சிக்கவும் வாய்ப்புண்டு. சம்பந்தமே இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.
போலிக் கணக்கு என்று கண்டுபிடிப்பது எப்படி?
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உங்களுக்கு நட்புக் கோரிக்கை விடுக்கும் ப்ரொஃபைலில் இருக்கும் புகைப்படங்களை முதலில் கவனித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கணக்கை நிர்வகிப்பவர்தான் புகைப்படத்தில் உள்ளவரா என்று சந்தேகம் ஏற்பட்டால், அந்தப் புகைப்படத்தைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். கூகுளில் புகைப்படத் தேடலில் (Image Search) உள்ளிட்டுத் தேடிப் பாருங்கள். இதன்மூலம் இந்தப் புகைப்படங்கள் வேறு எங்கெல்லாம் உள்ளன?, வேறு இடத்தில், வேறு பெயரில் இந்தப் படம் உள்ளதா? வேறு யாராவது அந்த புகைப்படத்துக்குச் சொந்தமானவர்களா? என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
அடுத்ததாக, சமூகவலைதளக் கணக்கு எவ்வளவு நாட்களாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பாருங்கள். போலிக் கணக்குகள் பெரும்பாலும் சமீபத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கும். சில மாதங்கள், அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை மட்டுமே இருந்தால் அவற்றை நம்பாதீர்கள். பல ஆண்டுகளாக இருக்கும் கணக்குகளை ஓரளவு நம்பலாம்.
அந்தக் கணக்கில் நண்பர்களாக, பின்தொடர்பவர்களாக இணைந்துள்ள நபர்களின் எண்ணிக்கையையும் கவனியுங்கள். அதில் குறைவான நபர்களே இருந்தால், ஓரளவு கண்டுபிடிக்கலாம்.
தனிப்பட்ட இடங்களில் சந்திக்காதீர்கள்
அதையும்தாண்டி சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்திருக்கிறது; அவரால் ஈர்க்கப்பட்டீர்கள் என்றால் அதுகுறித்து உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் தெரிவியுங்கள். பொது இடங்களில் அவரைச் சந்தித்துப் பேசுங்கள். வீடு, விடுதி அறை எனத் தனிப்பட்ட இடங்களில் சந்திக்காதீர்கள்.
நீங்கள் உங்கள் நண்பரின் நண்பர் (Mutual Friend) என்ற வகையில் ஒருவரோடு பேச, நம்ப, பழக ஆரம்பித்திருக்கலாம். ஆனால் சமூக வலைதளங்களில் உங்களின் நண்பருக்கு அவர் நண்பராக இருக்க வாய்ப்பே இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பேசுங்கள்.
ஆன்லைனில் பேசும்போது அந்தரங்கப் புகைப்படங்களை ஒருபோதும் அனுப்பாதீர்கள். இதன்மூலம் தாய், தந்தை என உங்களின் குடும்பத்தினரையும் சம்பந்தப்பட்ட நபர் மிரட்டி, ஆதாயம் தேட முயற்சிக்கலாம்.
புகார் அளிப்பது எப்படி?
உங்களின் புகைப்படங்கள் இணையத்திலோ, தனிப்பட்ட முறையிலோ தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால், தயவுசெய்து https://cybercrime.gov.in/ என்ற இணைய முகவரியில் புகார் அளியுங்கள். சம்பந்தப்பட்ட நபர்களின் சமூக வலைதளக் கணக்கு URL முகவரியையும் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல், 1930 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது 112 என்ற சர்வதேச எமர்ஜென்சி எண்ணையோ அழைத்துப் பேசுங்கள்.
பெரும்பாலான பெண்கள் துணிந்து புகாரளிக்க முன்வராததால்தான், குற்றங்களும் மோசடிகளும் தொடர்ந்து நடக்கின்றன. பாலியல் மோசடியில் பெரும்பாலும் முதல் முறை மாட்டிக் கொள்ளாதவர்கள்தான், அடுத்தடுத்த நிகழ்வுகளில் தொழில்முறைக் குற்றவாளிகளாக மாறுகின்றனர். இதை உணர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் முன்வர வேண்டியது அவசியம்'' என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.
பெண்களிடையே சமூகம், ஆண்கள் குறித்த சரியான புரிதல் இளம் வயதில் இருந்தே கற்பிக்கப்பட வேண்டும். அதையும்மீறி ஆபாசப் படங்கள், நிர்வாண படங்கள் வெளியானால் இந்த சமூகத்தில் கூனிக் குறுக வேண்டியது அந்தப் படங்களை வெளியிட்டவர்களே தவிர, அந்தப் படங்களில் உள்ள அப்பாவிகள் அல்ல. இந்தத் தெளிவும் புரிதலும் இளம் பெண்களுக்கு வரவேண்டும்.
அப்போதுதான் இதுபோன்ற கயவர்களால் பாதிக்கப்படும் பெண்கள், மிரட்டப்படும் இளம்பெண்கள் துணிச்சலாக வெளியில் வந்து புகார் கொடுப்பார்கள். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும், புகார் கொடுப்பவர்களின் ரகசியத் தன்மையைக் காப்பாற்ற காவல்துறையும் முன்வர வேண்டும்.