விருதுநகரில் வேலைவாய்ப்பு மழை.. தனியார் துறை & TNPSC தேர்வர்களுக்கு அழைப்பு - உடனே கவனிக்கவும் !
தனியார் துறையில் பணிவாய்ப்பு தேடுபவர்கள் 23.01.2026 அன்று நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் - என மாவட்ட ஆட்சியர் தகவல்

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.01.2026 அன்றும், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-II/IIA முதன்மைத் தேர்வுக்கு மாநில அளவிலான இலவச முழு மாதிரித் தேர்வுகள் 24.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய நாட்களிலும் நடைபெற உள்ளது.
வேலை வாய்ப்பு முகாம்
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 23.01.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, ANAAMALAIS TOYOTA, TVS SUNDARAM BRAKELININGS LTD, PHONE PE, DVARA KGFS MADURAI போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, I.T.I., டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.
போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 23.01.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group-II/IIA -க்கான முதன்மைத்(Mains) தேர்வுக்கு தயாராகும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக மாநில அளவிலான இலவச முழு மாதிரித் தேர்வுகள் 24.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்முழுமாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/XWQtErDH6Vh2K3ej9-ல் பதிவு செய்தோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக தெரிவிக்கலாம். எனவே, TNPSC Group-II/IIA முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மாநில அளவிலான இந்த முழு மாதிரித் தேர்வில் கலந்துகொள்ளுமாறும், தனியார் துறையில் பணிவாய்ப்பு தேடுபவர்கள் 23.01.2026 அன்று நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.




















