SSC MTS 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும் எழுதலாம்; 11 ஆயிரம் மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும் எழுதும் வகையில், மத்திய அரசில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளை மறுநாள் (பிப்.17) கடைசித் தேதி ஆகும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும் எழுதும் வகையில், மத்திய அரசில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளை மறுநாள் (பிப்.17) கடைசித் தேதி ஆகும்.
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பிப்ரவரி 17 கடைசித் தேதி
இந்த நிலையில், எஸ்எஸ்சி எம்டிஎஸ் (Multi Tasking Staff) தேர்வு மற்றும் ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம்.
நேரடியாக சலான் முறையில் கட்டணம் செலுத்த பிப்ரவரி 20 கடைசித் தேதி ஆகும். விண்ணப்பப் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்
பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் - 529 பணியிடங்கள்
இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. எம்டிஎஸ் தேர்வில், கடந்த 2021ஆம் ஆண்டு விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எப்படி நடக்கிறது?
இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணிதத் திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.
முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு. ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்யவும்.
* முகப்புப் பக்கத்தில் Apply க்ளிக் செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.
* அதில் தோன்றும் "Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022" என்ற பக்கத்தைச் சொடுக்கவும்.
* லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf