PWC Jobs: பி.டபள்யூ.சி நிறுவனம் அறிவித்த 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்.. இந்தியர்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக, பிடபள்யூசி நிறுவனம் ( Pwc Jobs) அறிவித்துள்ளது.
30 ஆயிரம் வேலைவாய்ப்புகள்:
இங்கிலாந்தை தலைமயிடமாக கொண்டு செயல்படும் Pwc எனபப்டும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளில் புதியதாக இந்தியாவில் 30 ஆயிரம் பணியிடங்களை ஏற்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், 2028ம் அண்டு இந்தியாவில் Pwc நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் இந்தியாவின் Pwc பிரிவுகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் புதிய உலகளாவிய மையங்களை அமைப்பதற்கும், தற்போதுள்ள மையங்களை விரிவாக்குவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சேவை தரத்தை மேம்படுத்தவும், கூட்டு முயற்சியை மேற்கொள்வதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் அதன் இந்திய நடைமுறை மற்றும் உலகளாவிய விநியோக மையங்களுக்கு இடையில், 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை Pwc நிறுவனம் கொண்டுள்ளது.
PwC அமெரிக்க கருத்து
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”PwC இந்தியா மற்றும் PwC அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான எங்களது மேம்பட்ட ஒத்துழைப்பு, நமது உலகளாவிய திறமையின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கவும் உதவும். இது நமது மக்களுக்கு சிறந்த தரத்திலான ஆழமான தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும்” என அமெரிக்காவின் கிளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிளை கருத்து:
அதேநேரம், "2021 இல் தொடங்கப்பட்ட புதிய உலகளாவிய மூலோபய திட்டத்தின் ஒரு பகுதியாக, PwC இந்தியா நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், உள்நாட்டு சந்தையின் திறனைப் பயன்படுத்துவதற்கும், சமூகத்திற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உறுதி எடுத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கவும், நமது நாட்டிற்கு மிகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வழிகளை உருவாக்கவும் உதவுவதற்கு வாடிக்கையாளர்களுடனும் பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். எங்கள் புதிய முயற்சி இந்த திசையில் ஒரு படி மட்டுமே உள்ளது. இந்தியாவின் பரந்த மக்கள்தொகையை சரியாக பயன்படுத்த எங்கள் நிறுவனம் மேலும் முயற்சிக்கும்” என PwC நிறுவனத்தின் இந்திய தலைவர் சஞ்சீவ் கிரிஷன் தெரிவித்துள்ளார்.
இந்திய pwc நிறுவனம்
கடந்த ஆண்டில் மட்டும் PwC நிறுவனம் இந்தியாவில், புவனேஷ்வர், ஜெய்பூர் மற்றும் நொய்டா ஆகிய 3 நகரங்களில் புதிய அலுவலகங்களை திறந்துள்ளது. இங்கு நிலவும் தேவைகளுக்கு ஏற்ப தங்களை வலுப்படுத்திக் கொள்ளவும், புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 155 நாடுகளில் சுமார் 3 லட்சம் ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனம், கணக்கியல், தணிக்கை, மனிதவள ஆலோசனை மற்றும் மூலோபாய மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை வணிகச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்க செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான PwC நிறுவனத்தின் அறிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.