Job alert: 400 சதவிகித வேலைவாய்ப்பு...120 சதவிகித போனஸ்! - டாடா..இன்ஃபோசிஸ் அறிவிப்பு!
இந்தப் பேரிடர் காலத்தில் பணிநீக்கம் செய்ததால் தற்போது ஐ.டி.நிறுவனங்களில் 400 சதவிகிதம் வரை காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன
கொரோனா பேரிடரால் பல நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கின. காக்னிசண்ட், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது பெருத்த சர்ச்சைக்குள்ளானது. கொரோனா இந்தியாவைத் தாக்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் புதிதாக ஆள்சேர்ப்பதில் மும்முரமாகியுள்ளன இந்த ஐ.டி. நிறுவனங்கள். உங்களுக்கு லிங்க்ட் இன் அக்கவுண்ட் உள்ளதா? அது ஒன்றே இதுகுறித்த தகவலைத் தெரிந்துக்கொள்ளப் போதுமானது என்கின்றது இதுகுறித்து ஆய்வு வெளியிட்டுள்ள இன் டீப் நிறுவனம்.
இதுகுறித்த அவர்களது விரிவான அறிக்கையில், ‘இந்தப் பேரிடர் காலத்தில் பணிநீக்கம் செய்ததால் தற்போது ஐ.டி.நிறுவனங்களில் 400 சதவிகிதம் வரை காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2020ல் கொரோனா தொற்று அதிகரித்த ஒருசில மாதங்களிலேயே ஐ.டி. நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளன. இதற்கிடையேதான் தற்போது வேலைவாய்ப்புகள் மீண்டும் பெருகத் தொடங்கியுள்ளன. இதுதவிர தொழில்துறை சார்ந்த நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் 150 முதல் 300 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பது மட்டுமல்ல, சம்பளமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் வாய்ப்பு தேடி வருபவர்களும் அதிக சம்பளம் கேட்கிறார்கள் என அறிக்கை கூறுகிறது. அதனால் சம்பள உயர்வும் 70-120 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரை சம்பள உயர்வு வெறும் 20-30 சதவிகிதம் மட்டுமே ஐ.டி. நிறுவனங்களில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையேதான் தற்போது டாடாவின் ஐ.டி. பிரிவான டாடா கன்ஸல்டன்சி நிறுவனம் நீண்டகாலம் பணியில் இல்லாத பெண்களை மீண்டும் வேலையில் சேர்க்கும் விதமாக வேலைவாய்ப்பு திட்டத்தை அண்மையில் அறிவித்திருந்தது. ’வயதாகிவிட்டதாலோ அல்லது உங்களது பணி அனுபவத்தில் பெரிய கேப் விழுந்துவிட்டாலோ உங்களுடைய திறமை குறைந்துவிட்டதாக இல்லை. எந்நேரமும் மீண்டும் நீங்கள் விட்ட வேலையைத் தொடங்கலாம்’ என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 2022ம் நிதியாண்டில் மட்டும் ஐ.டி.நிறுவனங்களின் ஒட்டுமொத்த சம்பளத்தொகை 1.6-17 பில்லியன்கள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.டி.நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தேடும் நபர்களுக்கு இது பொன்னான காலம். இந்த ஐ.டி. வேலை வாய்ப்பு அதிகரிப்பதால் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் வணிகமும் அதிகரிக்கும் என இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில்தான் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்யும் ஊழியர்களை சிறிது சிறிதாகப் பணிக்குத் திரும்பச் சொல்லி டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து கொரோனாவால் நலிவடைந்த ஐ.டி. துறை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.