IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
வங்கி பணியில் சேர விரும்பும் தகுதியான பட்டதாரிகள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியில் சேர விரும்புவோருக்கு அரிய வாய்ப்பாக, நாடு முழுவதும் 11,403 காலிப்பணியிடங்களுக்கு IBPS விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் (Customer Service Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் 11,403 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 675 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக ஆட்சேர்ப்பு நடைபெறுவதால், ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆட்சேர்ப்பில் பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்கேற்கின்றன. இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்கத் திறன் கட்டாயம். மேலும், கணினி தொடர்பான டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2026 ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உள்ளிட்ட வயது தளர்வுகள் வழங்கப்படும்.
தேர்வு இரண்டு கட்டங்களாக முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து 100 கேள்விகளுடன் நடத்தப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் 200 மதிப்பெண்கள் கொண்ட முதன்மைத் தேர்வில் பங்கேற்கலாம். அதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது/நிதி அறிவு தொடர்பான 155 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத் தேர்வு கிடையாது.
முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் 0.25 மதிப்பெண் நெகட்டிவ் மார்க் கழிக்கப்படும்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுப் பிரிவு, ஓ.பி.சி. மற்றும் இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.850, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதத்திலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்நிலைத் தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திருப்பூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் மையங்கள் செயல்படும். வங்கி பணியில் சேர விரும்பும் தகுதியான பட்டதாரிகள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















