உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்... திருமூலர் கூற்றும் ஆரோக்கியமான உணவுமுறையும்!
உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் பாடியதைப் போன்று மிகச் சரியான உணவுகளை உடலுக்கு தருவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான திடமான உடலைப் பெற முடியும்.
நம் உடலானது நிறைய தனிமங்களாலும் சேர்மங்களாலும் தண்ணீராலும் உருவாகியுள்ளது. உண்ட உணவை கரைப்பதற்கு ஒரு அமிலம் சுரக்கிறது என்றால் அடிபட்ட காயத்தை மூடுவதற்கு மற்றொரு அமிலம் சுரக்கிறது.
இதற்கு உடல் முழுவதும் பரவி இருக்கின்ற நாளமில்லா சுரப்பிகள்தான் காரணம். நம்முடைய எந்தவிதமான உத்தரவும் இல்லாமல் இதயம் துடித்துக் கொண்டிருப்பதைப் போல தங்களது வேலைகளை அந்தந்த சுரப்பிகள் செய்து கொண்டிருக்கின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் மிகச் சரியான உணவை உண்பதன் மூலம் மட்டுமே இந்தச் சுரப்பிகளுக்கு தேவையான தனிமங்களையும் சேர்மங்களையும் நீரையும் தர முடியும். பெரும்பாலும் சைவமோ அல்லது அசைவமோ அதை வீட்டில் சமைத்து சாப்பிடும்போது நம் உடலுக்கு எந்த விதமான தீங்கையும் அவை செய்யாமல் இரைப்பையில் சரியாக ஜீரணிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான சக்திகளை கொடுக்கிறது
இருந்தாலும் இன்று ஆண்களும் பெண்களும் எல்லா வீடுகளிலும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இந்த நிலையில் யாராவது ஒருவர் வெளியில் இருந்து உணவை சாப்பிடும் நிலையில் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படியாக வெளியில் இருந்து பெறப்படும் உணவில் குறைந்தபட்சம் நிறமிகள், திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் எண்ணெய், நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்ட காய்கறிகளோ அல்லது மாமிசங்களோ இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகளும் நாம் வெளியில் இருந்து பெறும் உணவில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதைவிட மற்றும் ஒரு விஷயம், ஒத்து வராத இரண்டு உணவுகளை கலந்து உண்பதையும் தவிர்க்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ’ராங் காம்பினேஷன் ஃபுட்’ என்று சொல்லுவார்கள்.
உதாரணத்திற்கு கீரைகளையும் இறைச்சியையும் அல்லது காய்கறிகளையும், இறைச்சிகளையும் அல்லது தயிர் மற்றும் முட்டைகளையும், நெய் போன்றவற்றை இணைத்து உண்ணாமல் இருப்பது சாலச்சிறந்தது. ஏனென்றால் இறைச்சி செரிப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும் காய்கறிகளோ பழங்களோ விரைவில் ஜீரணம் ஆகிவிடும். இப்படி இருக்கும்பட்சத்தில் வயிற்றில் ஏதாவது ஒரு உணவு செரிக்கப்படாமலும் ஒரு உணவு செரித்தும் இருக்கும் இது மலச்சிக்கல் வாய்வு தொந்தரவு இவைகளை உண்டாக்கும்.
இவ்வாறான உணவுகளை தொடர்ந்து உண்ணும்போது வாயு தொந்தரவு அதிகரித்து அது அல்சர், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவு வண்ணமயமாக்க போடப்படும் வண்ணத்துக்கான நிறமிகள் பிளாஸ்டிக் துகள்களை போல ஜீரணமாகாமலே இருக்கும்.
இதைப்போலவே திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் எண்ணெய் ஜீரணத்துக்கு இருக்கும் அமிலங்களை செயல்பட விடாமல் நாள்பட்ட வாயு தொந்தரவுகளை உருவாக்கும்.
இத்தகைய ராங் காம்பினேஷன் ஃபுட் ஆனது கேன்சர் செல்களை உருவாக்க காரணிகளாக இருக்கிறது என்று கூறுகிறது மருத்துவம். ஆகையால், நம் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மகிழ்ந்திருக்கவும் அழகாக நம்முடைய வேலைகளைச் செய்யவும், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், அந்த உடல் ஆரோக்கியம் எப்படி கிடைக்கும் என்றால் உடம்பிற்கு பசிக்கும் நேரத்தில் கிடைக்கும் மிகச் சரியான உணவின் மூலம் மட்டுமே.
ஆகவே ”உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்” என்று திருமூலர் பாடியதைப் போன்று மிகச் சரியான உணவுகளை உடலுக்கு தருவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான திடமான உடலும் அதன் மூலம் தெளிவான மனதும் கிடைக்கப்பெறும். வரும் காலங்களில் ஒவ்வொருவரும் நம் உடலுக்கு தேவையான உணவுகளை சரியான நேரத்தில் உட்கொண்டு உடலை வளர்ப்போம், ஆரோக்கியம் காப்போம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )