International Yoga Day 2024: உடலை திடகாத்திரமாக வைக்க இந்த யோகாவை தினமும் செய்யுங்க.. ரொம்ப ஈசி தான்!
International Yoga Day 2024 : இந்த பதிவில் பெரும்பாலான மக்களால் வீட்டிலே செய்யக்கூடிய சுலபமான யோக பயிற்சியை பற்றி பார்க்கலாம்.
ஜூன் 21 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்க உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக இந்தியாவில் பல ஆன்மிக மையங்களில் அரசு சார்பாக யோகா தினம் கொண்டாடப்படும்.
ஒரு சில ஆசனங்களை செய்வதற்கு நீண்ட கால பயிற்சி தேவைப்படும். அதை யோகா நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய முடியும். இந்த பதிவில் பெரும்பாலான மக்களால் வீட்டிலே செய்யக்கூடிய சுலபமான யோக பயிற்சியை பற்றி பார்க்கலாம்.
அற்புதங்களை செய்யும் சூரிய நமஸ்காரம் :
சூரிய அஸ்தமனத்தின் போது செய்யப்படும் பயிற்சி சூரிய நமஸ்காரம் என அழைக்கப்படுகிறது. இந்த சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 12 போஸ்கள் அடங்கும். இதை செய்வது மிகவும் எளிதுதான் ஆனால் கொஞ்சம் பொறுமை தேவைப்படும்.
இந்த பயிற்சியை செய்யும் போது சூரியனை எதிர்நோக்கி இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். முதலில் பிரணமாசனம், கைகளை இதயம் இருக்கும் பகுதியில் கூப்பி வைக்க வேண்டும். இந்த போஸில் மூச்சை வெளியிட வேண்டும். அடுத்து ஹஸ்தோ தனாசனம், முதுகையும் இரண்டு கைகளையும் பொறுமையாக பின்புறம் கொண்டு செல்ல வேண்டும். இந்த போஸில் மூச்சை உள்வாங்க வேண்டும்.
மூன்றாவது ஹஸ்தபாதாசனம், பின்நோக்கி இருக்கும் உடம்பை முன்புறமாக வளைத்து பாதத்தை தொடும் வரை குனிய வேண்டும். இப்படி குனியும் போது உங்கள் கால்களை மடக்காமல் இருக்க வேண்டும். இந்த போஸில் மூச்சை வெளியிட வேண்டும். நான்காவது அஸ்வ சஞ்சலனாசனா, இடது காலை பின்னோக்கி வைத்து வலது காலை முன்னோக்கி முட்டி போடும் வகையில் வைத்து மேல்நோக்கி பார்க்க வேண்டும்.
இந்த போஸில் மூச்சை உள்வாங்க வேண்டும். ஐந்தாவது தண்டசனா, மூச்சை உள்வாங்கி வலது காலையும் பின்னோக்கி வைத்து, உடலை நேராக வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் ப்ளாங்க் (Plank) என்று சொல்லப்படும் போஸ் போலவே இருக்கும். இந்த போஸிலும் மூச்சை உள்வாங்க வேண்டும். ஆறாவதாக அஷ்டாங்க நமஸ்காரம். இந்த போஸை கோயிலில் கீழே விழுந்து கும்பிடுவது போல் செய்ய வேண்டும். உடலின் 8 அங்கங்களும் தரையில் பட வேண்டும். இந்த போஸின் போது மூச்சை வெளியிட வேண்டும்.
ஏழாவதாக புஜங்காசனம். படம் எடுக்கும் பாம்பை போன்ற போஸ்தான் இது. கைகளும் கால்களும் தரையில் இருக்க, உடம்பும் முகமும் மேல்நோக்கி இருக்க வேண்டும். இந்த போஸின் போது மூச்சை உள்வாங்க வேண்டும்.எட்டாவதாக அதோ முக ஸ்வனாசனா. நம் உடல் இந்த போஸ் பார்பதற்கு பாலம் போல் இருக்கும். இதில் இடுப்பு மற்றும் புட்டம் மேல்நோக்கி இருக்க வேண்டும். இந்த முறை மூச்சை வெளியிட வேண்டும்.
ஒன்பதாவதாக அஸ்வ சஞ்சலனாசனாவை மீண்டும் செய்து மூச்சை உள்வாங்க வேண்டும். பத்தாவதாக முன்குறிப்பிட்ட ஹஸ்தபாதாசனாவை செய்து மூச்சை வெளியிட வேண்டும். பதினொன்றவதாக, மீண்டும் ஹஸ்தோ தனாசனம் செய்து மூச்சை உள்வாங்க வேண்டும். கடைசியாக தடாசனம், கைகளை கீழே இறக்கி விட்டு மூச்சை வெளியிட்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரம் நன்மைகள் : இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், தசைகளை வலுவாக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை : 12 போஸ்களை செய்வதால் 1 செட் சூரிய நமஸ்காரம் முடிவடையும். இதே போல் ஒருநாளைக்கு 12 முறை செய்ய வேண்டும். ஆரம்ப கட்டத்தில் 2-3 முறை செய்யலாம். போக போக எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். ஒரு செட்டை பொறுமையாக 1 நிமிடத்திற்கு செய்ய வேண்டும். ஒவ்வொரு செட்டிற்கு இடையே ரிலாக்ஸ் செய்ய வேண்டும். மூச்சை உள்வாங்குவதிலும் வெளியிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளம் சூரிய ஒளி படும் திறந்த வெளியில் செய்வதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்கும்.
பின்குறிப்பு : உடலில் ஏதாவது காயங்கள் இருந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தாலும் இதை தவிர்க்கவும். குழந்தைகள், வயதானவர்கள் யோகா நிபுணரின் ஆலோசனை பெற்ற பின் இதை செய்யலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )