Health Tips: உங்களுக்கு ஒரு காது கேட்காது என்பதை கண்டறிவது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் இதோ!
செவித்திறன் இழப்பு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. நரம்பு பாதிப்பு எனப்படும் காதை மூளையுடன் இணைக்கும் நரம்பில் ஏற்படும் பிரச்சனை, மற்றொன்று வெளிக்காது அல்லது நடுக்காது வழியாக ஏற்படும் பிரச்னையாகும்.

செவித்திறன் இழப்பு என்பது மனித வாழ்க்கையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரமான நிகழ்வாகும். குழந்தை முதல் முதியவர்கள் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தற்காலத்தில் காது கேளாமை பிரச்னைக்கு பல சிகிச்சைகள் வந்து விட்டாலும் நன்றாக கேட்டுக் கொண்டிருக்கும் காது வயது ஏற ஏற மெல்ல மெல்ல கேட்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. இதனை மருத்துவ உலகில் 'பிரஸ்பைகுசிஸ்' என அழைப்பார்கள். இதற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. நாம் இந்த தொகுப்பில் ஒற்றை செவித்திறன் இழப்பு பற்றி தெரிந்துக் கொள்வோம்.
காது கேளாமை பிரச்னைக்கு என்ன காரணம்?
செவித்திறன் இழப்பு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. நரம்பு பாதிப்பு எனப்படும் காதை மூளையுடன் இணைக்கும் நரம்பில் ஏற்படும் பிரச்சனை, மற்றொன்று வெளிக்காது அல்லது நடுக்காது வழியாக ஒலி உடலுக்குள் உட்செல்வதில் உண்டாகும் பிரச்னைகள் என கொள்ளலாம். ஒரு பக்க அல்லது திடீர் செவித்திறன் இழப்பு என்பது உள்காது அல்லது செவி நரம்பு பாதிக்கப்பட்டதால் உண்டாகிறது என மருத்துவர் அனுப் சபர்வாள் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதில், காதைப் பரிசோதித்து 48 முதல் 72 மணி நேரத்திற்குள் இழந்த நரம்புச் செயல்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி மீண்டும் காது கேட்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும். வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருப்பது காது கேளாமைக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
காது கேட்பதில்லை என்பதை கண்டறிவது எப்படி?
யாராவது உங்களை அழைக்கும்போது ஒலியின் திசையைத் துல்லியமாக கண்டறிய முடியாமல் திணறுவது. காரணம் ஒலி வரக்கூடிய இடத்தை கண்டறிய ஒரே நேரத்தில் மூளை இரண்டு காதுகளையும் பயன்படுத்தும். இதில் சிரமம் ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்.
அதேசமயம் காது பிரச்னை இருக்கும் பக்கத்தில் இருந்து வரும் சத்தம் நன்றாக கேட்கும் பக்கத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதுவும் சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் காது இரு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் அடிக்கடி தலைவலிக்கு வழிவகுக்கிறது.
இதெல்லாம் இருந்தால் கவனமாக இருங்க
ஒரு காதில் மட்டும் தொடர்ந்து கேட்கும் ஒலி, தெளிவற்ற அல்லது நீரின் அடியில் இருந்து பேசுவது போல சத்தம் இருந்தால், கூட்டத்தில் கேட்பதில் சிரமம் ஏற்படுவது, எப்போதும் காதில் அழுத்தம் அல்லது அடைப்பு போன்ற விஷயங்கள் ஏற்படுவது போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை காண வேண்டும். மேலும் காதில் குச்சி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தினால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ காது கேட்காமல் போகவும் வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ட்ரெண்டிங் செய்திகள்





















