Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் புதிதாக 5415 பேருக்கு கொரோனா
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் துணிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் புதிதாக 5415 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 415 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,415 ஆக உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் இந்தாண்டின் மிகக் குறைந்த கொரோனா எண்ணிக்கை இதுவாகும்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தாண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கை இது எனக் கூறப்படுகிறது. டெல்லியில் மேலும் 158 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அவசியம்
டெல்டா பிளஸ் வைரஸ் மிக விரைவாக பரவுவதால், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் காற்றோட்டமான இடங்களில் இருப்பதுடன், முகக் கவசத்தையும் தவறாது அணிய வேண்டும். பல ஏழை நாடுகளில் தடுப்பூசி போடவில்லை என்பதால் உலகளவில் டெல்டா வைரஸ்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் - உலக சுகாதார நிறுவனம்
27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க அனுமதி
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். இதில், மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் 28ஆம் தேதி முதல் 50 சதவிகித பயணிகளுடன், ஏற்கெனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகளை தமிழ்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும். முகக் கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Delta Plus Varaint: பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.