திருவாரூரில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு கொரோனா - 9ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 32 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இந்த அறிவிப்புக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டில் புதிய அறிவிப்பாக வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்து செயல்படலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும், பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து செயல்பட வேண்டும், மேலும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் உணவினை பரிமாறி கொள்ளக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. அதனையும் மீறி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு என்பது ஏற்பட்டு வந்தன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 32 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தொற்றுக்கான பரிசோதனை என்பது சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது.
அதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்னிலையில் திருவாரூர் மாவட்டம் கொட்டார குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் பயின்று வரும் சக மாணவ மாணவிகளுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொட்டாரக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பைங்காநாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் 9 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்ததாக வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )