IAS Facts: ஐஏஎஸ் அதிகாரிக்கு கிடைக்கும் உச்சபட்ச பதவி என்ன? தகுதிகள், அனுபவப் பட்டியல்? இவ்வளவு வேலைகளா?
IAS Facts: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எப்படி படிப்படியாக முதன்மைச் செயலாளர் பதவிக்கு உயருகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IAS Facts: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச அங்கீகாரம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
முதன்மை செயலாளரான சக்திகாந்த தாஸ்:
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் மோடி அரசாங்கத்தில் ஒரு பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பிப்ரவரி 22 அன்று, அவர் அரசாங்கத்தால் பிரதமர் மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.கே. மிஸ்ரா ஏற்கனவே பிரதான முதன்மைச் செயலாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொறுப்பு அமைச்சரவை நியமனக் குழுவால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரை நீடிக்கும். தாஸ் 1980 பேட்ச்சைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவர். ஆபிஐ ஆளுநராக பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக சக்திகாந்த தாஸ் 2018 முதல் 2024 வரை பதவி வகித்தார்.
ஐஏஎஸ் அதிகாரி எப்படி முதன்மைச் செயலாளராகிறார்?
எந்தவொரு ஐஏஎஸ் அதிகாரியும் முதன்மைச் செயலாளராக ஆவதற்கு நீண்ட அனுபவமும் பல பதவி உயர்வுகளும் தேவை. பிரதமரின் ஆலோசகராக, நாட்டிற்கு புதிய திசையை வழங்குவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஜூனியர் அளவில் தொடங்குகிறார். தொடர்ந்து 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய பிறகு, அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பின்னர் அவர் சீனியர் ஸ்கேல் அதிகாரிக்கான பதவியைப் பெறுகிறார். அதனைதொடர்ந்து, கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளர் பதவியைப் பெறுகிறார். எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு ஐஏஎஸ் அதிகாரியும் குறைந்தபட்சம் 30 முதல் 35 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை மற்றும் பல பதவி உயர்வுகளுக்குப் பிறகு முதன்மைச் செயலாளராக ஆக்கப்படுகிறார். பொதுவாக இந்திய குடிமையியல் சேவை அதிகாரிகளே முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுவர். சில நேரங்களில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகளும் இந்த பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.
பணிகள் என்ன?
ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதமரின் முதன்மைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரால் நியமிக்கப்படுகிறார். கொள்கை வகுத்தல், நிர்வாகப் பணிகள் மற்றும் முக்கியமான அரசு விஷயங்களுக்கு ஆலோசனை வழங்குவதும் அவற்றைக் கவனிப்பதும் முதன்மைச் செயலாளரின் முக்கிய வேலையாகும். இது தவிர, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சினைகளிலும் அவர்கள் பிரதமருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். பிரதமர் அலுவலகத்தை நடத்தும் பொறுப்பும் முதன்மைச் செயலாளருக்கு உண்டு. அவர்களின் பதவி ஒரு கேபினட் அமைச்சருக்குச் சமம் மற்றும் முதன்மைச் செயலாளரின் சம்பளம் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். இந்தியாவின் முன்னுரிமை வரிசையில் முதன்மைச் செயலாளர் வகிப்பவர் 7வது இடத்தில் உள்ளார்.
சக்திகாந்த தாஸின் பயணம்:
சக்திகாந்த தாஸ் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 2014 ஆம் ஆண்டு உரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொருளாதார விவகார செயலாளராகவும், 15வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.