“என் மனைவியை நினைத்துதான் அந்த பாடலை எழுதினேன்; பல தடவ ப்ளீஸ் கேட்டேன்” - யுவனின் அதீத காதல்...!
ரசிகர்கள் ஒவ்வொருவராக கேள்விகேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர்களின் இடையே அமர்ந்திருந்த யுவன் அவரது மனைவி சஃப்ரூன் நிஷாவை நோக்கி உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று கூறினார்.
முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா 25 வருட சினிமா வாழ்க்கை நிறைவடைந்ததை ஒட்டி ரசிகர்களை சந்தித்தபோது தன் மனைவி கேட்ட கேள்விக்கு மேடையில் பதில் கூறியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை அடுத்து 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்க முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ளார். திரைத்துறையில் தனது 25 ஆண்டு பயணம் குறித்து, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி யுவன் சங்கர் ராஜா, இந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரையான என் இசைப்பயணம் மகிழ்ச்சியாக பயணிக்க ரசிகர்களாகி உங்களின் ஆதரவுதான் காரணம். நீங்கள் இல்லாவிட்டால், இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்க முடியாது என்றார். இந்த மகிழ்ச்சியான நேரத்தில், என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். 25 வருடம் எப்படி வேகமாக சென்றது என்றே எனக்கு தெரியவில்லை. இன்னும், ஆரம்பத்தில் எந்த இடத்தில் இருந்தேனோ அப்படி இருப்பது போலத்தான் தெரிகிறது என்று உணர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் பேசினார். இதனை முன்னிட்டு திரையுலகினர் பலரும் யுவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரசிகர்கள் ஒவ்வொருவராக கேள்விகேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர்களின் இடையே அமர்ந்திருந்த யுவன் அவரது மனைவி சஃப்ரூன் நிஷாவை நோக்கி உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிரிப்பலையில் அரங்கமே குலுங்கியது. அப்போது சஃப்ரூன் நிஷா ஒரு கேள்வி கேட்டார், "ஹாலிடே எப்போ கூட்டிட்டு போறீங்க?" என்று கேட்டார். அப்போதும் சிரிப்பலை கூடியது. அதற்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா, "போறோம், கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மா… சீக்கிரம்" என்றார். அதன்பிறகு அங்கிருந்த பெண் ஒருவர், யுவனிடம் அவருடைய பாடலில் எந்த பாடலை தனது மனைவி சஃப்ரூன் நிஷாவுக்கு டெடிக்கேட் செய்வார் என்று கேட்டபோது, ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவத்தை கூறினார். அப்போது பேசிய அவர், "காதல் ஆசை யாரை விட்டதோ. அந்த பாட்டதான் நான் அவர்களுக்கே அனுப்புனேன். அந்த பாட்டு அவங்கள நெனச்சுதான் பண்ணேன், முடிச்சு கேட்டதும் அதீத காதல்ல எடுத்து அவங்களுக்கு அனுப்பிட்டேன். அனுப்புனதுக்கு அப்புறம்தான் ரியலைஸ் பன்றேன், இந்த பாட்டு இன்னும் ரிலீஸ் ஆகலன்னு. அப்புறம் உடனே அவங்களுக்கு மெசேஜ் பண்ணேன், தயவு செஞ்சு யாருக்கும் போட்டு காமிச்சிடாதம்மா, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்ன்னு பல ப்ளீஸ் போட்டுட்டு இருந்தேன்." என்றார்.
யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். யுவனின் மனைவி பெரிதாக எந்தவொரு திரையுலக நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். யுவன் குறித்து பெரிதாகப் பேட்டியும் அளித்ததில்லை. அவரை பொதுவாக எங்கும் அழைத்து செல்லாத யுவன், இந்த நிகழ்விற்கு அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதியின் மாமனிதன், சந்தானத்தின் ஏஜன்ட் கண்ணாயிரம், அமீரின் இறைவன் மிக பெரியவன், ராமின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிற்கு இசையமைத்து வருகிறார்.