Madhampatty Rangaraj : யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்? குக் வித் கோமாளியின் இணையும் புதிய நடுவர் இவ்வளவு பிரபலமானவரா?
Madhampatty Rangaraj : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5 சீசன் நடுவராக செஃப் தாமுவுடன் புதிய நடுவராக இணையும் மாதம்பட்டி ரங்கராஜ் யார் தெரியுமா?
சின்னத்திரை ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் பாஸ்டர் நிகழ்ச்சியாக அனைவரின் கவலையையும் மறந்த சிரிக்க வைத்த ஒரு நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக கலக்கிய இந்த சமையல் கலந்த காமெடி ஷோவை விரும்பாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சி கலகலப்பாக ஒளிபரப்பானதற்கு முக்கிய காரணம் கோமாளிகள் என்றாலும் நடுவர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இணைந்து சிறப்பாக நடத்திய இந்த நிகழ்ச்சியில் இருந்து அதன் இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் மட்டுமின்றி செஃப் வெங்கடேஷ் பட்டும் விலகுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை செஃப் தாமுவுடன் நடுவராக இணைய போகும் மற்றுமொரு பிரபலம் குறித்த தகவல் வெளியானது. 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்தான் அந்த பிரபலம். ஒரு நடிகர் எப்படி சமையல் போட்டியில் நடுவராக போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 திருமணங்களுக்கு பிரமாண்டமாக விருந்து சமைக்கும் பிரபலமான சமையல்காரர்தான் மாதம்பட்டி ரங்கராஜ் . கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவரின் தந்தை ஒரு பிரபலமான சமையல்காரராக இருந்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட அவரின் உணவை ருசித்துள்ளார் என கூறப்படுகிறது. தந்தையின் தொழிலை கையில் எடுத்த மாதம்பட்டி ரங்கராஜ், சமையலில் வெவ்வேறு புதுமைகளை புகுத்தி கோவை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.
ஏராளமான செலிபிரிட்டி வீட்டு திருமணங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் ஹைலைட். அவரின் சமையலை ருசிக்காத பிரபலங்களே கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி கூட அவருடைய உணவை ருசித்துள்ளார். அதே போல தமிழ்நாட்டு தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரின் உணவை ருசித்துள்ளனர்.
இந்திய அளவில் மட்டுமின்றி மலேசியாவில் நடைபெற்ற அரசியல்வாதி ஒருவரின் மகள் திருமணத்திற்கு சுமார் 10000 பேருக்கு விருந்து சமைத்து அசத்தியுள்ளார். அவரின் பல வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. சமையல் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அதை கார்ப்பரேட் அளவுக்கு உயர்த்தி வெற்றி கண்டவர்.
தமிழகத்திலேயே மிக பெரிய அளவில் சமையல் தொழிலை செய்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். அவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.