Vijayakanth: கேப்டனுக்கு எம்மதமும் சம்மதம்... விஜயகாந்தின் பூஜை அறையைப் பற்றிய நெகிழ்ச்சி தகவல்!
Vijayakanth: அவரவரின் மத வழிபாடு அவர் அவருக்கு மிகவும் முக்கியமானது, அதை மற்றவர்கள் இழிவுபடுத்தக் கூடாது” என்பது தான் கேப்டனின் நோக்கம்.
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேரில் அஞ்சலி :
விஜயகாந்த் உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் முகத்தை ஒரு முறையாவது கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். மேலும் ஏராளமான பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நேற்றும் இன்றும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள் சோசியல் மீடியா மூலம் அவர்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நல்ல ஆத்மா :
கேப்டன் விஜயகாந்த் எப்படிப்பட்ட கொடை வள்ளல், எந்த அளவிற்கு அனைவர் மீதும் அன்பு கொண்டவர், ஒரு சிறந்த தலைவனாக எப்படி விளங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஒவ்வொருவரும் அவர் பற்றின நினைவலைகளை பகிரும்போது மனது கனக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆத்மாவை கடவுள் இவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொண்டாரே என்ற வேதனையைப் பகிர்ந்து வருகிறார்கள்.
எம்மதமும் சம்மதம் :
கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. எம்மதமும் சம்மதம் என வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர் விஜயகாந்த்.
அவரின் வீட்டுப் பூஜையறையில் மக்கா - மதீனா, திருப்பதி ஏழுமலையான், இயேசு - மாதா, விநாயகர், முருகர் என அனைத்து மதத்தின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு இருக்குமாம். அவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்து பண்டிகையையும் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டு வாழ்நாள் முழுக்க கடைபிடித்துள்ளார். அவர் எப்போது எல்லாம் மனசு சரியில்லாமல் இருக்கிறாரோ அப்போது எல்லாம் கண்ணூர் தர்காவுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
பாகுபாடு பார்க்காதவர் :
சிறு வயது முதலே மேல மாசி வீதியில் இருக்கும் பள்ளிவாசலுக்கு சென்ற பழக்கத்தால் இஸ்லாமியர்களுடன் நெருங்கி பழகிய விஜயகாந்த், கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதையும் வழக்கமாகக் கடைபிடித்து வந்துள்ளார்.
“அவரவரின் மத வழிபாடு அவர் அவருக்கு மிகவும் முக்கியமானது, அதை மற்றவர்கள் இழிவுபடுத்தக் கூடாது” என்பது தான் கேப்டனின் நோக்கம். அதனால் விஜயகாந்த் என்றுமே எம்மதமும் சம்மதமாக வாழ்ந்தவர். அதனால் தான் அவரை ஜாதியின்றி மதமின்றி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினார்கள். மனிதர்களுள் எந்த வகையிலும் வேற்றுமை பார்க்காத, மனித நேயம் கொண்ட விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிப்பவர்களும் இதையே தான் நேற்றும் இன்றும் கண்ணீர்மல்க பறைசாற்றி வருகிறார்கள்.