Jana Nayagan PreBooking : ஜனநாயகன் 6 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி...ரசிகர்கள் கொண்டாட்டம்
JanaNayagan Special Show : விஜயின் ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி அதிகாலை 6 மணி முதல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் துவங்க இருக்கின்றன

ஜனநாயகன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு நிகழ்ச்சி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமாக்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் அதிகாலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அண்மையில் மலேசியாவில் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிட்டதட்ட 80 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். தனது ரசிகர்களுடன் கடைசியாக விஜய் உரையாடினார், அவர்களுக்காக நடனமாடினார் உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
பகவந்த் கேசரி ரீமேக் இல்லை
ஜனநாயகன் படத்தைப் பற்றி பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வந்தன. இந்த வதந்திகளுக்கு ஆடியோ லாஞ்சில் இயக்குநர் எச் வினோத் பதிலளித்தார். 'ஜனநாயகன் எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை. இது தளபதி படம். நீங்கள் ஆடிப்பாடி கொண்டாடுவதற்கும் இந்த படத்தில் இடமிருக்கிறது. உட்கார்ந்து சிந்திக்கும் விதமான தருணங்களும் இருக்கின்றன. படத்தின் க்ளைமேக்ஸில் எந்த ஒரு அழுகாச்சியும் இல்லை. ஒரு பெரிய நம்பிக்கை இருக்கிறது. " என எச் வினோத் பேசியது படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு இருந்த சந்தேகங்களை போக்கும் விதமாக அமைந்தது
முன்பதிவுகள் தொடக்கம்
ஜனநாயகன் படத்தின் முன்பதிவுகள் ஏற்கனவே வெளிநாடுகளில் தொடங்கிவிட்டன . பெங்களூரில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. இதன் மூலம் மட்டும் 50 லட்சம் வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு காட்சிகள்
இந்தியாவில் ஜனநாயகன் படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை 4 மணி முதல் தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிகாலை 6 மணிக்கு ஜனநாயகன் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கியுள்ளன அந்த மாநில அரசுகள். தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிப்பதால் காலை 9 மணி முதல் காட்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சிறப்பு காட்சிகளை பார்க்க விரும்பும் ரசிகர்கள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.





















