Thalapathy Kacheri : அதே பகவந்த் கேசரி பாடல்...பிள்ளையாரை தூக்கி பெரியாரை சொருகிய விஜய்
விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ள நிலையில் இந்த பாட்டில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் உள்ளது

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாகியிருக்கிறது ஜனநாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , கெளதம் மேனன் , பிரியாமணி ,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் இன்று படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி ' பாடல் வெளியாகியுள்ளது.
மீண்டும் மிரட்டிய விஜய் அனிருத் கூட்டணி
அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார். விஜய் , அறிவு , அனிருத் மூவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள். விஜய் நடித்த கத்தி , மாஸ்டர் , பீஸ்ட் , லியோ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இருவரது கூட்டணியிலும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாடல்கள் வழங்கியுள்ளது. அந்த வகையில் 'தளபதி கச்சேரி' பாடல் ரசிகர்களிடையே இண்ஸ்டண்ட் ஹிட் ஆகியுள்ளது. வெளியான சில நிமிடங்களில் 10 லட்சம் பார்வயாளர்களை கடந்துள்ளது. காட்சியமைப்பு , விஜயின் நடனம் என இந்த பாடலில் பல்வேறு அம்சங்கள் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
பகவந்த் கேசரி பாடல் சாயல்
ஜன நாயகன் படத்தின் மையக் கதை தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தில் இருந்து தழுவப்பட்டது என்பது நாம் அறிந்த தகவலே. தற்போது வெளியாகியுள்ள தளபதி கச்சேரி பாடலிலும் ரசிகர்கள் பகவந்த் கேசரி படத்தின் பாடலின் சாயல் இருப்பதை சுட்டிகாட்டியுள்ளார்கள். பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்றுள்ள கணேஷ் ஆந்தம் பாடலைப் போலவே ஜன நாயகன் படத்தின் முதல் பாடலும் காட்சியமைப்பட்டுள்ளது
பிள்ளையாரை நீக்கி பெரியார்
காட்சியமைப்பு ரீதியாக இரு பாடல்களும் ஒரே மாதிரி இருந்தாலும் இரு பாடல்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. பகவந்த் கேசரி பாடலில் பாலையா பிள்ளையாரை போற்றி பாடுகிறார். ஆனால் ஜனநாயகன் பாடலில் பிள்ளையாரை நீக்கிவிட்டு விஜய் பெரியாரை பற்றிய பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. "ஆவோ டூகெதர் பையா பையா...சாதி பேதம் எல்லா லேதய்யா" என விஜய் பாட அவர் பின்னணியில் பெரியார் , மார்க்ஸ் , அம்பேதகர் ஆகிய தலைவர்களின் சிலைகள் காட்டப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜயை கொண்டாட்டமாக வழியனுப்பி வைக்கும் விதமாக தளபதி கச்சேரி பாடல் அமைந்துள்ளது. அதே நேரத்தில் விஜயின் அரசியல் வருகைக்கும் இந்த பாடலும் ஜன நாயகன் திரைப்படமும் பெரியளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது





















