(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay Deverakonda: “ரஜினிக்கே கடைசி 6 படம் ஃபிளாப்.. வெற்றி தோல்வி சகஜம்” - விஜய் தேவரகொண்டா பேச்சால் ரசிகர்கள் கோபம்..!
6 படங்கள் அடுத்தடுத்து தோல்வி கொடுத்த பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதாக நடிகர் விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 படங்கள் அடுத்தடுத்து தோல்வி கொடுத்த பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதாக நடிகர் விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘குஷி’. இந்த படத்தில் நடிகை சமந்தா, முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்திற்கான ப்ரமோசன் பணிகளில் திரைப்பட குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
காதல் கதை சார்ந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள குஷி படத்தை பொதுமக்கள் தியேட்டர்களில் சென்று காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அப்போது விஜய் தேவரகொண்டாவிடம், ‘சமீபத்திய உங்களுடைய படங்கள் தோல்விகளை சந்தித்து வருகிறதே?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘இங்க உள்ள சூப்பர் ஸ்டார் பிரபலங்கள் அனைவருக்கும் வெற்றி, தோல்வி என்பது உள்ளது. தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடைசியாக நடித்த 6 படங்கள் தோல்வி தான். ஆனால் அவர் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அப்படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதுவும் பேசாமல் படம் பார்க்கின்றனர்.
அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவிக்கும் கடைசி 6,7 படங்கள் தோல்வி தான். கடந்த சங்கராந்தி அன்று ஏராளமான படங்கள் வந்தது. அதில் அவர் நடித்த வால்டர் வீரய்யா படம் வெளியாகி தோல்வியை தழுவியது. அவர் சரியான இயக்குநரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதே எனர்ஜியுடன் செயல்படுகிறார். சீரஞ்சிவி தெலுங்கு சினிமாவில் நிறைய புரட்சி செய்தார். அவரால் கிட்டதட்ட ஆயிரம் பேர் சினிமாவில் நடிக்க வந்திருப்பார்கள்.
ரஜினி, சீரஞ்சிவி ஆகியோர் படங்கள் சரியாக செல்லவில்லை என்றால் அவர்கள் மரியாதைக் குறைவாக விமர்சிக்கப்படுவதாக உணர்கிறேன். அவர்கள் சினிமாவுக்கு என்ன செய்தார்கள் என சிந்தியுங்கள். எனவே அனைவரையும் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த வயதில் ரஜினி, கமல், சீரஞ்சிவி போன்றவர்கள் இப்படியான பெரிய படங்கள் செய்வதை பார்க்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது” என்றார்.