Vijay Antony: அனிருத், யுவனைப் போல இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள விஜய் ஆண்டனி.. எப்போது தெரியுமா?
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, விரைவில் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி:
கோலிவுட்டின் பிரபலமான இயக்குனர்களுள் விஜய் ஆண்டனியும் ஒருவர். புரியாத வார்த்தையை ராகமாக்கி, தாளமாக்கி பிறகு பாடலாக்குவதிலும் திறமைசாலியாக விளங்குகிறார் விஜய். அதற்கு உதாரணமாக, டிஷ்யூம் படத்தில் இடம் பெற்ற “டைலாமோ” பாடலையும், உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள “உசுமுலாரசே” பாடலையும் கூறலாம். இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்த நான் படத்தில் கூட, “மக்காயலா..” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். “அது என்னப்பா வித்தியாசமா மக்காயலா..?”என யாராவது கேள்வியெழுப்பினால், “அது ஒன்னுமில்லங்க..திருநெல்வேலி பக்கம் ஏலே மக்கா-னு கூப்பிடுவாங்க, அத அப்டியே திருப்பி போட்டு மக்காயலா-னு பாட்டோட ஓப்பனிங் லைனா மாத்திட்டேன்” என கூலாக பதில் சொல்வார் விஜய் ஆன்டனி. “மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு..”என பாடல் பாடி, 2கே கிட்ஸின் மனதில் இடம் பிடித்தவர் இவர். அவ்வையாரின் ஆத்திச்சூடியை “ஆத்திச்சூ..” என ஸ்டைலாக மாற்றி, “கேளு மகனே கேளு இது ராப்-கூத்து கேளு…” என அனைவரையும் கேட்க வைத்தார்.
View this post on Instagram
ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி!
பல ‘ஹிட்’ பாடல்களை கொடுத்துள்ள இவர், நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். க்ரைம்-த்ரில்லராக உருவாகியிருந்த இப்படத்தின் கதையும், விஜய் ஆண்டனியின் ஹீரோ முகமும் அனைவருக்கும் பிடித்துப்போனது. இதனால் வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படமாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் விஜய். இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன், சலீம், சைத்தான், எமன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடித்த படங்களுக்கு இவரே மியூசிக் போடுவது, இவரது தனி சிறப்பு. தற்போது அவர் பிச்சைக்காரன் 2 படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு Anti bikli என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ரித்திகா சிங், ராதிகா ஆப்தே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
எப்போது கான்ஸர்ட்?
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியா மற்றும் சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். யுவன் ரசிகர்கள் ஏரளமானோருக்கு, விஷுவல் ட்ரீட்-ஆக அமைந்தது இந்த நிகழ்ச்சி. இளம் இசையமைப்பாளர் அனிருத்தும், பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கூட, சிங்கப்பூரில் இவரது கான்ஸர்ட் நடைபெற்றது. இப்படி, ரசிகர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் அனைவரும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதால், விஜய் ஆண்டனியையும், “எப்போது கான்ஸார்ட் நடத்த போகிறீர்கள்” என கேட்டு, இணையதளத்தில் மீம் போட ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் அசந்து போகும் வகையில், விஜய் ஆண்டனி பதில் ஒன்றை அளித்துள்ளார்.
ரசிகர்களின் கான்ஸர்ட் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள விஜய் ஆண்டனி, தான் தற்போது பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தில் பிசியாக இருப்பதாகவும், அந்த படத்தின் வேலைகள் முடிந்தவுடன் கண்டிப்பாக இசை நிகழ்ச்சியை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த கான்ஸார்டை எதிர் நோக்கி, ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.