Velpari Movie Update: ஷங்கரின் இயக்கத்தில் வேள்பாரி ஆகிறார் ரன்வீர் சிங்... எகிறும் எதிர்பார்ப்பு..
வேள்பாரி நாவலை அடிப்படயைாக கொண்டு ஷங்கர் இயக்கத்தில் ரண்வீர்சிங் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற இவரது திரைப்படங்களுக்கு என்று ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கு படமொன்றையும், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங் நடிக்க இருப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், ஷங்கர் கமல் மற்றும் ராம்சரண் படங்களில் பரபரப்பாக இயங்கியதால் அந்த படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. அந்நியன் படத்தின் ரீமேக்கில்தான் ரன்வீர்சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், புதிய திருப்பமாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை அடிப்படையாக கொண்டு ஷங்கர் இயக்க உள்ள திரைப்படத்திலே ரன்வீர்சிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் தமிழ் வாசகர்கள் மத்தியிலும், இலக்கிய வட்டாரத்திலும் மிகவும் புகழ்பெற்றது.
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய சினிமாவில் புராணப் படங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ் காவியமான வேள்பாரியில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்ட படங்களின் பிதாமகனாக கருதப்படும் ஷங்கர் இயக்கிய இந்தியன், முதல்வன், சிவாஜி, அந்நியன், எந்திரன், ஐ போன்ற படங்கள் அவரது பிரம்மாண்டத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றிப்படங்களை அளிக்காத ஷங்கர் வேள்பாரி மூலமாக தன்னுடைய கம்பேக்கை மிகப்பெரிய அளவில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கலாம். மேலும், பத்மாவத் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர்சிங், பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்திலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது