Madhavan on Mirabai Chanu: ”எனக்கு வார்த்தைகளே வரல” - தங்கமகள் மீராபாய் சானுவின் வீட்டை பற்றி பேசிய மாதவன்..!
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் வீட்டை கண்ட நடிகர் மாதவன், “இது உண்மையா.. எனக்கு வார்த்தைகள் இல்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ எடைகளை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட நாட்டின் பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், சிலர் அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டு, இந்த கடினமான சூழலில் இருந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார் என்று பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Hey this cannot be true. I am at a complete loss of words. https://t.co/4H7IPK95J7
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 29, 2021
அவ்வாறு மீராபாய் சானும், அவரது குடும்பத்தினரும் ஒரு சாதாரண வீட்டில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்றை கண்ட நடிகர் மாதவன் அதிர்ச்சியில், ஹே.. இது உண்மையா இருக்க முடியாது. என்னிடம் பேச்சே வரவில்லை. வார்த்தைகளே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
மாதவனின் பதிவிற்கு கீழ் பலரும் இந்தியாவின் பாதி மக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறார்கள் என்றும், இந்தியாவில் கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் பல கலவையான பதில்களை அளித்துள்ளனர்.
This feeling of meeting my family after a long span of 2 years is beyond words. I'm grateful to each one of you for showing faith in me and supporting me. Thank you Ema and baba for all the sacrifices you made for me to reach at this level. pic.twitter.com/RlXby6QoOv
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 28, 2021
மாதவன் பகிர்ந்த படமானது மீராபாய் சானு சில வருடங்களுக்கு முன்பு வசித்த அவர்களது இல்லமாகும். தற்போது, ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கத்துடன் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் படத்தை மீராபாய் சானு பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த படத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தை சந்திப்பதாகவும், தனது தாய்க்கும், தந்தைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மீராபாய் பானு தன்னுடைய சிறிய வயதில் விறகு சுமந்தும், தினசரி 50 கிலோமீட்டர் நடந்தும் மிகவும் வறுமை நிலையிலே வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.