Leo Issue: விஸ்வரூபம் எடுத்த லியோ பிரச்சினை.. திரையுலகினரோடு மோதலா? .. அமைச்சர் ரகுபதி கொடுத்த பதில்..!
திரைத்துறையை முடக்க அரசு முயற்சிக்கவில்லை, திரையுலகம் எங்கள் நட்புலகம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையை முடக்க அரசு முயற்சிக்கவில்லை, திரையுலகம் எங்கள் நட்புலகம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு சிறப்பு காட்சி சேர்த்து மொத்தம் 5 காட்சிகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும். இரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என லியோ பட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில் காலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி லியோ படத்தின் தயாரிப்பு தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனிதா சுமந்த், ‘அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது. காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டி தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு தரப்பு திரையிட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்தார்.
இப்படியான நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற கொடி காத்த குமரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, “விஜய்யை பார்த்து திமுக அரசு பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்ற, தாழ்வுகளை பார்க்ககூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த பாரபட்சமுமின்றி அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்திருந்தது. திரைத்துறை முடங்கி இருப்பதாக எங்களை சந்திப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்” என குற்றம் சாட்டியிருந்தார்.
கடம்பூர் ராஜூவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திரைத்துறையை முடக்க அரசு முயற்சிக்கவில்லை, திரையுலகம் எங்கள் நட்புலகம். படத்திற்கு தடை கேட்டு திரையுலகினரோடு விரோத போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். சிறிய தயாரிப்புகளை கூட இந்த அரசு ஊக்குவிக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகாலை 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடப்போம்” என தெரிவித்தார்.