TJ Gnanavel: முள்ளும் மலரும் படத்தை 50 தடவை பார்த்தேன்... ரஜினியின் ப்ரெஷ் லுக்! - இயக்குநர் ஞானவேல்
TJ Gnanavel : வேட்டையன் படத்தின் நடிகர் ரஜினியுடன் பணிபுரிந்த போது அவரை பற்றி அறிந்து கொண்ட சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார் இயக்குநர் ஞானவேல்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. நடிகர் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் ஆயத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது.
'ஜெயிலர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் லீட் ரோலில் நடித்துள்ள இப்படம் குறித்த தகவல் வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஞானவேல், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசுகையில் ஒரு புதுவிதமான ப்ரெஷ் லுக் கொண்ட ரஜினி சாரை இந்த படத்தில் பார்க்க போகிறீர்கள். அது படத்துக்கும் மிக அழகாக பொருந்தி உள்ளது.
ரஜினி சாரின் எவர்க்ரீன் படமான 'முள்ளும் மலரும்' படத்தை இதுவரையில் 50 முறைக்கும் மேல் பார்த்துவிட்டேன். அவர் ஒரு மிக பெரிய ஸ்டார் என்பதை காட்டிலும் ஒரு திறமையான நடிகர். அவரின் அந்த நடிப்பு திறமையை நான் இந்த படத்தின் மூலம் ஆராய்ந்துவிட்டேன்.
ரஜினி சாரிடம் இருக்கும் மற்றுமொரு சிறப்பான விஷயம் என்றால் அது அவரின் நேர்மை. இந்த படத்தில் அவருடன் பணிபுரிந்ததன் மூலம் எப்படி நாம் செய்யும் வேலைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். நள்ளிரவு 2 மணிக்கு செட்டில் இருக்க வேண்டும் என சொன்னால் இந்த வயதிலும் கூட சொன்ன நேரத்துக்கு வந்து நிற்பார் என தெரிவித்து இருந்தார் இயக்குநர் ஞானவேல். அந்த அளவுக்கு தன்னுடைய வேலை மீது மரியாதை வைத்துள்ளார். இப்படிப்பட்ட நல்ல நற்பலன்கள் இருப்பதால் தான் அவர் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.
அனிருத் இசையில் 'வேட்டையன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மனசிலாயோ...' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் AI மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்த பாடலின் சிறப்பம்சம்.