The Vaccine War Trailer: வேக்சின் வார் ட்ரெய்லரில் ’பாரத்’... அடுத்த சர்ச்சைக்கு தயாரான காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்!
'தி வேக்சின் வார் - உண்மைக் கதை' என்றும், ‘பாரத்தின் சைண்டிஸ்டுகள்’, ‘பாரத்தின் வேக்சின்’ என சமீபத்திய டாப் சர்ச்சைகளுக்கு ஏற்ப இந்தியாவை 'பாரத்' எனக் குறிப்பிட்டு வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன.
பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி வேக்சின் வார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.
காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' எனும் ஒற்றைத் திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பேசுபொருளானவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. காஷ்மீர் பகுதிகளில் 80களின் பிற்பகுதி முதல் காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், திரைத்துறையினர் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பெற்றது.
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இப்படம் அமைந்ததாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், 69ஆவது தேசிய திரைப்படம் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது இப்படத்துக்கு வழங்கப்பட்டு, மீண்டும் இப்படம் கண்டனங்களைக் குவித்தது.
தடுப்பூசிக்கான போர்
இதனிடையே, தன் அடுத்த படமான ‘தி வேக்சின் வார்’ படத்தினை சென்ற ஆண்டு இறுதியில் அறிவித்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில நாள்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவியும், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்காக தேசிய விருது வென்றவருமான பல்லவி ஜோஷி, இப்படத்தைத் தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நானா படேகர், ரைமா சென் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
உண்மைக்கதை, பாரத் சர்ச்சை
கொரோனா காலக்கட்டத்தின் போது பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யாமல், உள்நாட்டு தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்திய அறிவியலாளர்கள் குழு பட்ட கஷ்டம், பிற நாடுகளுடனான போட்டி, அரசியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ட்ரெய்லர் அமைந்துள்ளது.
'தி வேக்சின் வார் - உண்மைக் கதை' என இந்த ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘பாரத்தின் சைண்டிஸ்டுகள்’, ‘பாரத்தின் வேக்சின்’ என சமீபத்திய டாப் சர்ச்சைகளுக்கு ஏற்ப இந்தியாவை 'பாரத்' எனக் குறிப்பிட்டு வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்று இப்படமும் என்னென்ன சர்ச்சைகளைக் கிளப்பப் போகிறது, தேசிய விருது கொடுப்பார்களா என உற்றுநோக்கியபடி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘தி வேக்சின் வார்’ படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.