This Week Movie Release: "ஹன்சிகா முதல் யோகி பாபு வரை" இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்?
This week movie releases : இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்திருந்த மிஷன் சேப்டர் 1 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்த வகையில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றன. அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சேப்டர் 1' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
இப்படங்கள் திரையரங்கை ஆக்கிரமித்ததால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெரிய அளவில் திரைப்படங்கள் வெளியாகவில்லை.ஆனால் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 மற்றும் ஜனவரி 26 தேதிகளில் ஒரு சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்:
தூக்குத்துரை :
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், சென்ராயன், பாலா சரவணன், மாரிமுத்து, மகேஷ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர் மகேஷ் சுப்ரமணியம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மறைந்து இருக்கும் புதையலை கண்டுபிடிக்கும் கதைக்களத்தை கொண்ட இந்த நகைச்சுவை திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
105 மினிட்ஸ் :
ருத்ரன்ஷ் செலுலாய்டு நிறுவனத்தின் கீழ் பொம்மக் சிவா தயாரிப்பில், ராஜு டுஸ்ஸா இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மட்டுமே சிங்கிள் ஷாட்டில் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் '105 மினிட்ஸ்'. இப்படத்தில் அவரை தவிர வேறு யாரும் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை போன்ற ஒரு திரைப்படம். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
கேப்டன் மில்லர் (தெலுங்கு) :
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது.
பிரதிநிதி 2 (தெலுங்கு) :
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் நாரா ரோஹித் நடித்துள்ள 'பிரதிநிதி 2 ' திரைப்படம், கடந்த 2014ம் ஆண்ட வெளியான 'பிரதிநிதி' படத்தின் இரண்டாம் பாகம். வனரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் குமார்ராசா பத்துலா மற்றும் ஆஞ்சநேயலு ஸ்ரீ தோட்டா மற்றும் கொண்டாகல்லா ரெஜேந்தர் ரெட்டி இணைந்து இப்படத்தை தயாரிக்க மூர்த்தி தேவகுப்தாபு இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.