Paarijadham: ஆல்யா மானசாவின் புது சீரியல் பாரிஜாதம்.. ரசிகர்களை கவர்ந்த புது ப்ரமோ..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பாரிஜாதம் சீரியலின் புதிய ப்ரமோ இன்று வெளியாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு நிகராக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சின்னத்திரை சீரியல்களும் கொண்டிருக்கின்றனர். இதனால், சன், விஜய், ஜீ தமிழ் தாெலைக்காட்சிகள் பல்வேறு புத்தம் புதிய நாடகங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
பாரிஜாதம்:
அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், சின்னஞ்சிறு கிளியே, அயலி போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜீ தமிழில் தற்போது பாரிஜாதம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் ராஜா ராணி சீரியல் மூலமாக மிகவும் பிரபலமடைந்த ஆல்யா மானசா இசை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஜாதகம், ஜோதிடத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கொண்ட மாமியாருக்கும், கணவருக்கு விருப்பமே இல்லாமல் மனைவியாக பணக்கார வீட்டிற்கு மருமகளாக செல்லும் மருமகளுக்குமான கதையே இந்த பாரிஜாதம்.
கதை என்ன?
ஒரு விபத்தில் காது கேக்கும் தன்மையை இழக்கும் இசை, ஒரே ஒரு பொய்யால் இசையே உலகம் என இருக்கும் பிரபல பாடகரான நாயகனை திருமணம் செய்து கொள்கிறார். தனது மகள்களின் நலனுக்காக இசையின் சித்தி அவர்களது ஜாதகத்தை மாற்றி எழுதிய நிலையில், உண்மை தெரியாமல் எப்படி இந்த திருமணத்தை நடத்துகின்றனர்? இந்த உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்? என்ற பல கேள்விகளுடன் பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
புதிய ப்ரமோ:
பாரிஜாதம் சீரியலின் ப்ரமோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மற்றொரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வர சீரியல் வெற்றி பெற வேண்டும் என பலரும் ஆலியா மானசாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சீரியலில் ராஷிக் உர்ஸ் கோபால், சுவாதி ஆகியோரும் நடிக்கின்றனர். ஜீ தமிழில் இனியா தொடருக்கு பிறகு ஆல்யா மானசா நடிக்கும் சீரியல் இதுவாகும்.





















