மதம் கடந்த காதலை ஏற்காத பெற்றோர்... கதை கேட்டு அபிராமி செய்த செயல்... சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் எபிசோடில் நெகிழ்ச்சி!
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் அம்மா, காதலுக்காக மதத்தைக் கடந்து கனிஷ்கரின் அப்பாவை கரம் பிடித்த நிலையில், பெற்றோர் தங்களை முழுவதுமாக கைவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருபவர் கனிஷ்கர். சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த இவர் இந்த வாரம் நடைபெற்ற பக்திப் பாடல்கள் ரவுண்டில் ஜோதா அக்பர் படத்தில் இடம் பெறும் ‘க்வாஜா எங்கள் க்வாஜா’ என்ற பாடலை பாடி மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.
நடுவர்கள், ஜூரிகள் என எல்லாரும் கனிஷ்கரை பாராட்டி முடிந்த பிறகு மேடைக்கு வந்த பெற்றோர், தங்களது காதல் கதையை பகிர்ந்து கொண்டுள்ளனர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் அம்மா காதலுக்காக மதத்தைக் கடந்து கனிஷ்கரின் அப்பாவை கரம் பிடித்துள்ளார்.
திருமணமாகி குழந்தை பிறகும் அவரது பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர், அம்மா - அப்பா தன்னுடன் பேசி 17 ஆண்டுகள் ஆனதாக கண்ணீருடன் அவர் கூறியுள்ளார். இந்த சரிகமப மேடையில் காதல் திருமணம் செய்து கொண்டதற்க்காக தன்னுடைய பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
மேலும் “காதல் திருமணத்தால் பெற்றோர் கை விட்டதால் எங்களது வீட்டில் எந்த மதத்தின் கடவுள் புகைப்படங்களையும் நாங்கள் வைத்து கொள்ளவில்லை, கனிஷ்கருக்கும் கடவுள் இல்லை என்று சொல்லி தான் வளர்த்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் கதையை கேட்ட அபிராமி மேடைக்கு வந்து கட்டித் தழுவி ஆறுதல் கூறி இவர்களுக்காக ‘அன்பே சிவம்’ படத்தில் இடம்பெறும் யார் யார் சிவம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.
‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ மேடையில் அபிராமி பாடிய முதல் பாடல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.