Bigg Boss 7 Tamil: ஆளுங்கட்சியை சீண்டும் கமல்? பிக்பாஸ் மேடையில் அனல் பறந்த அரசியல் பேச்சு.. இன்றைய ஷோவில் பரபர!
இரண்டு முறை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் உங்களுக்கு (பூர்ணிமா) மமதை வந்துவிட்டது என்று தோன்றுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ்:
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசனில் முதலில் அனன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, அக்ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். 5 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை, யுகேந்திரன், வினுஷா தேவி, விஜய் வர்மா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இப்படியான நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே சவால் மிகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த பிரதீப் நேற்று அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறப்பட்டார். இதற்கு சோஷியல் மீடியாவில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகிறது.
பாஜகவை நேரடியாக சீண்டுகிறாரா கமல்?
இப்படியான நிலையில் தான், இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், பூர்ணிமா இரண்டாவது முறையாக வீட்டின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி கமல்ஹாசன் நறுக் கருத்தை தெரிவித்திருக்கிறார். அதன்படி, "இரண்டு முறை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் உங்களுக்கு (பூர்ணிமா) மமதை வந்துவிட்டது என்று தோன்றுகிறது. அதிகாரம் துஷ்பிரயோகம் ஆகிவிடக் கூடாது. இந்தக் கருத்து பிக்பாஸ் தலைமைக்கு மட்டுமல்ல, எந்த தலைமைக்கும் பொருந்தும்” என்றார் கமல். இவரது கருத்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும், கமல் பாஜகவை சீண்டுகிறாரா? என்றும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் வெளியாகி வருகிறது. முன்னதாக, இந்துத்துவாவுக்கு எதிரான பல விமர்சனங்களை பல நேரங்களில் கமல் முன்வைத்தாலும், பாஜகவையோ, பிரதமர் மோடியையோ கமல் விமர்சிப்பதில்லை என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக இருந்து வந்தது. இருப்பினும், பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பல கருத்துகளை கமல் பேசி வருகிறார்.
அதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த அவர், பாரத் ஜோடா யாத்திரையில் ராகுலுடன் டெல்லியில் கைக்கோர்த்தார். மேலும், 'நான் காந்தியின் கொள்ளுப்பேரன்' என்றும் யாத்திரையில் முழங்கியிருக்கிறார். மத்தியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக பல கருத்துகளை பல மேடைகளில் பேசி வரும் கமல், தற்போது பிக்பாஸ் மேடையிலும் பாஜகவை குறிவைத்து பேசுவது போன்று கருத்து தெரிவித்திருக்கிறார்.